பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி

வழி காட்டி நிற்கின்றது. பெருஞ்சாலையிலிருந்து பிரியும் கிளைச் சாலை வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள திருவெள்ளறையை வந்து சேரலாம். ஊர் மிகச் சிறிய ஊர். எந்தவித வசதிகளும் இல்லாதது. நெடுஞ்சாலை யிலும் ஊரிலும் பெயரளவில் சிற்றுண்டி விடுதிகள் உள்ளன. திருக்கோயில் சுமார் 100 அடி உயரமுள்ள ஒரு குன்றின்மீது உள்ளது. வெள்ளறை-வெண்மையான பாறைகளாலியன்ற மலை (அறை-பாறை). மலையின் திருநாமமே ஊரின் திருநாம மாயிற்று. இத்திருத்தலத்து எம்பெருமானைப் பெரியாழ்வாரும்’ திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருக் கோயில் மண்டபத்தின் ஓரிடத்தில் அமர்ந்து ஆழ்வார்களின் பாசு ரங்களைச் சிந்திக்கின்றோம். இருவர் பாசுரங்களும் வெள் ளறையில் நின்ற கோலத்தையே திரும்பத் திரும்பக் கூறுகின்றன. திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் முன்னிரண்டு அடிகளில் தமது வேண்டுகோளும், பின்னிரண்டடிகளில் ஊர்ச் சூழலும் குறிப்பிடப்பெறுகின்றன. திருவெள்ளறை யின் சூழல் எப்படிப்பட்டது? தென்றல் மாந்தோப்புகளினூடே புகுகின்றது. சோலைகளிலுள்ள மல்லிகை முல்லை மொட்டுகளை மலரச் செய்து நறுமணத்தைப் பரப்புகின்றது (1). குருக்கத்தி மலர்களில் அணைந்து செல்லும் மெல்லிளங் காற்று வீதிகள் தோறும் நறுமணம் பரப்புகின்றது (2). வரால் மீன்கள் துள்ளி விளை யாடப் பெற்றவையும் தாமரை மலர்களில் மணம் வீசப் பெற்றவையுமான தடாகங்களால் சூழப்பெற்றது இவ்வூர்(3). மாஞ்சோலைகளில் போய்ப் புகுந்து அவற்றின் தளிர்களைக் கோதியதனால் வாய் துவர்ப்படைந்த பெண்குயில்கள் பலாப் பழங்களின் மதுவை உண்டு அத்துவர்ப்பை மாற்றுகின்றன (4). பெரிய காட்டு முல்லைகள் கரும்புகளின் மேலேறிப் படர்ந்து வெண்ணிறப் பூக்களை மலர்விக்கின்றன. அம்மலர்களின்மீது வண்டுகள் மொய்க்கும்போது அவற்றின் வாய்களில் தேன் பெருகுகின்றது (5). ஆணும், பெண்ணுமாய்ப் பூவிலே படுத்திருந்த வண்டுகளினிடையே ஊடல் உண்டாக, உடனே ஆண்வண்டு பேடைக்குத் தெரியாத ஓரிடத்தில் மறைந்திருக்க எண்ணி மகளிரின் கூந்தலிலே மறைந்திருக்கைக்காக மதி மண்டலத்தில் படிந்திருக்கும் சிகரங்களையுடைய மாளிகைகளில்

3. பெரியாழ். திரு. 1.5.8:2.8. (பதிகம்)

4. திருமங்கையாழ்வார் 5.3. (பதிகம்) ; 10.1.4