பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி

பெரியாழ்வார் திருவெள்ளறையில் அர்ச்சையாய் எழுந் தருளியிருக்கும் எம்பெருமானைக் குழந்தைக் கண்ணனாகப் பாவித்து யசோதைப் பிராட்டி அக்குழந்தையை நீராட்டிக் குழல் வாரிப் பூச்சூட்டின பின்பு அவனுக்குப் பிறர் கண்ணெச்சில் வாராதபடி காப்பிடக் கருதியவள். இவனை அந்தி வேளையில் காப்பிட்ட படியை ஆழ்வாரும் அநுபவிக்க எண்ணி தம்மை அப்பிராட்டியாகப் பாவித்து அவள் பேச்சாலே இவனைக் காப்பிட அழைத்து இனியராகின்றார். 'இந்திரன் நான்முகன் சிவன் மற்றுமுள்ள தேவர்கள் மந்திரமாமலர் கொண்டு மறைந்து நிற்கின்றனர்; இதுவே அந்திவேளையாகும் (1); நான் உன்னைக் கூவி நிற்பதால் பசுக்களெல்லாம் கன்றுகள் இருக்குமிடத்தில் வந்து கறப்பாரின்றிக் கத்துகின்றன. அந்தி வேளையில் நாற்சந்தியில் நில்லாதே (2); மகளிர் அட்ட சிறு சோற்றையும் கட்டின மணல்வீட்டையும் அழித்திட்டபோது உன்னை அதட்டினேன்; இப்போது ஒன்றும் செய்யேன் (3); நீ கண்ணில் மண்ணைத் தூவி உதைத்தாய் என்று எண்ணற்ற பிள்ளைகள் முறையிடுகின்றார்கள்; ஆதலால் நீ அங்குப் போகாமல் இங்கு வா (4); இவ்வூரில் தீம்பு செய்யும் பிள்ளைகள் எண்ணற்றவர்கள்; அவர்கள் செய்யும் தீம்புகளை உன்மேலேற்றிச் சொல்லு கின்றனர்; ஆதலால் அவர்களிடம் செல்லாமல் இங்கே வா (5); கம்சன் உன்னைக் கொல்வதற்குக் கருநிறசெம்மயிர்ப் பூதனை யை அனுப்பிய செய்தியை எல்லோரும்.அறிவர்; அவன் வேறு யாரையாவது உன்மீது ஏவக் கூடும்; ஆதலால் நீ அங்கு நிற் பதற்கு அஞ்சுகின்றேன் (6); பார்த்தால் சிறுவன் போலுள்ளாய்; நீ செய்யும் செயலோ மனிதர்களால் செய்ய முடியாதவை; உனது உண்மையான சொரூபத்தை என்னால் அறியக் கூட வில்லை இப்போது படுத்து உறங்கும் நேரம் (7), செல்வனே; நீ இருக்கிற இடம் கண்டார்க்கு நடுக்கத்தை விளைவிக்க வல்ல துர்க்கையின் இருப்பிடமாகும்; ஆகவே, நீ அங்கு நில்லாமல் விரைந்தோடி வா (8); நீ நாற்சந்தியில் செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது; அது துட்ட தேவதைகள் வசிக்கும் இடம்; நான் சொல்வதை சிலகாலமாவது கேள் (9); உனக்குக் காப்பிட அந்திவிளக்கு ஏற்றுகின்றேன். நீ அவ்விடத்தை விட்டுக் கடுக வருவாயாக’’ என்று வேண்டுகின்றார் ஆழ்வார். இங்ஙனம் ஆழ்வார்களின் அநுபவம் பெற்ற நிலையில் இறைவன் சந்நிதிக்கு வருகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும்