பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவெள்ளறை அஞ்சன வண்ணன் 45 புருடோத்தமனை வணங்குகின்றோம். பங்கயச் செல்வி, செண்பகவல்லி என்பன தாயாரின் திருநாமங்கள். இவரை வணங்கிஇவர்தம் ஆசியையும் பெறுகின்றோம். இறைவன் சந்நிதியில் ஆழ்வார்களின் திருப்பாசுரங்களை மிடற்றொலி கொண்டு ஓதி உளங்கரைகின்றோம். எம்பெருமானார் மண்டபத்தில் 'குறிப்பிட்ட ஒரு தூண் உள்ளது. அதன் முன் நின்று ஒலி எழுப்பினால் அவ்வொலி அந்தத் தூண் உள்ள திருச்சுற்றில் (பிராகாரம்) மும்முறை சுழன்று வந்து நம் காதில் எதிரொலிக்கும். முன்பு இந்த இடத்தில்தான் பிரபந்த சேவை செய்யப்பெற்றதாக செவி வழிச்செய்தியால் அறிகின்றோம். இஃது அக்காலத்தில் விளங்கிய பொறியியல் நுட்பத்தினை வியக்கத்தக்க முறையில் எடுத்துக் காட்டுகின்றது. நாமும் இதனைச் சோதித்து நம்மை மறக்கின்றோம். இந்நிலையில் திவ்வியகவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் ஒதுகின்றோம். “கல்லிருந்தான் தந்தை கமலத்தோன்; அக்கமலத் தில்லிருந்தான் தந்தை அரங்கேச னென்றே-தொல்லைமறை உள்ளறையா நின்றமையால் உள்ளமே, கள்ளமின்றி வெள்ளறையான் தோளே விரும்பு' (கல்-கைலாயமலை; கமலத்தோன்-தாமரையில் தோன்றிய நான்முகன்; அரங்கேசன்-திருவரங்கநாதன், தொல்லை மறை-பழமையான வேதம்; கள்ளம்-கபடம்; தாள்-திருவடிகள்) நான்முகன் சிவபெருமான் இவர்கட்கும் காரணமென்று திருமறைகளில் சிறப்பித்துக் கூறப்பெறும் தலைமை பெற்றுள்ள எம்பெருமானின் திருவடிகளை விரும்பிச் சரணம் அடைவா யாக' என்று தம் நெஞ்சிற்கு உபதேசம் செய்கின்றார் அய்யங்கார். இத்திருத்தலம் உய்யக் கொண்டார், எங்களாழ்வான் இவர்களின் பிறப்பிடம். வேதாந்த தேசிகரின் “ஹம்ச சந்தேசம்' என்ற தூதுப் பிரபந்தத்தில் இத்திருத்தலம் குறிப்பிடப் பெறுகின்றது. இவற்றை அறிந்த நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம்.

5. நுாற். திரு. அந்-6