பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.அன்பில் திருவடி அழகிய நம்பி

உலகில் ஒரு பொருளைச் செய்து முடித்தற்கு முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என மூன்று காரணங்கள் அமையும் என்பதை நாம் அறிவோம். இறைவன் உலகைப் படைப்பதற்கும் மூன்று காரணங்கள் வேண்டும். இறைவனே மூன்று காரணங்களும் ஆகின்றான் என்பது வைணவ சமயக் கொள்கை. இக்கொள்கையை 'எல்லாப் பொருட்கும் வித்தாய் முதலிற் சிதையாமே' என்ற நம்மாழ்வாரின் பாசுரத் தொடர் விளக்கும். இறைவன் முதற் காரணம் என்று சொல்வதில் ஒரு குறை தட்டுப்படும். குடத்திற்கு மண் முதற் காரணம். மண் குடமாக மாறினால் பின் அங்கு மண் இராது. அதுபோல இறைவன் முதற் காரணமாகி உலகப் பொருளாக மாறினால் பின் இறைவன் என வேறு பொருள் இருத்தல் இயலாது அல்லவா? இக்குறைபாட்டை விலக்குவதற் பொருட்டே 'வித்தாய் முதலிற் சிதையாமே' என்று குறிப்பிட்டார் ஆழ்வார். இதைத் தெளிவாக விளக்குதல் இன்றியமையாதது. இவ்வுலகப் பொருள்கட்கு அவற்றின் நுண்ணிய நிலை முதற்காரணம். பருப்பொருளாக மாறிய நிலையே காரியம். இறைவன் நுண்ணிய நிலையிலுள்ள சித்து அசித்துகளுள்ளேயும் அந்தர்யாமியாக உள்ளான். பருப்பொரு ளாக உள்ள நிலையிலும் அந்தர்யாமியாக உள்ளான். நுண்மை யான சித்து அசித்துகளில் இறைவன் அந்தர்யாமியாக இருக்கும் நிலை முதற் காரண நிலையாகும். பருப்பொருளாகவுள்ள சித்து அசித்துகளில் இறைவன் அந்தர்யாமியாகவுள்ள நிலையே காரிய நிலையாகும். அதனால், இறைவன் முதற்காரணமாகவுள்ள நிலையிலும், காரியமாகவுள்ள நிலையிலும் சிறிதும் வேறுபடுவ தில்லை. இக்கருத்தை ஆழ்வார் பாடலிலுள்ள “வித்தாய் முதலிற் சிதையாமே என்ற தொடர் அழகாக விளக்குகின்றது. உலகத்துப் பொருள்கள் போலன்றி இறைவன் தன் நிலையில் சிறிதும் சிதைவின்றி இருந்து கொண்டே எல்லாப் பொருள்கட்கும் வித்தாக உள்ளனன் (முதற் காரணமாகின்றான்) என்பது

1. திருவாய். 1.5.3