பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 சோழநாட்டுத் திருப்பதிகள் -

முதற்பகுதி வருகின்றோம். திருக்கோயில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ளது. திருமழிசை யாழ்வார் மட்டிலும் இத்திருக் கோயில் எம்பெருமானை ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்திருத்தலத்து எம்பெருமானின் திருநாமம் திருவடி அழகிய நம்பி என்பது; தெற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு சயனத் திருக்கோலத்தில் (புயங்க சயனம்) சேவை சாதிக்கின்றார். தாயார் அழகியவல்லி நாச்சியார் என்ற திருநாமத்துடன் வழங்கப் பெறுகின்றார். இவர்கள் இருவரையும் மனமாரச் சேவிக் கின்றோம். திருமழிசையார் பாசுரத்தையும் மிடற்றொலி கொண்டு ஓதுகின்றோம். “நாகத்தனைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள் நாகத்தனை யரங்கம் பேர்அன்பில்-நாகத்து அணைப்பால் கடல்கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பார் கருத்தன் ஆவான்' (நாகத்து அணை-பாம்புப் படுக்கை, வெஃகா-சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்; திருவெவ்வுள் திருவெள்ளுர்; பேர்-திருப்பேர்நகர்; பால் கடல்-திருப்பாற் கடல்; அணைப்பார் - அன்பர்) என்பது பாசுரம். இதில் ஏழு திருத்தலங்களுடன் அன்பில் என்ற திருத்தலத்தையும் சேர்த்து மங்களா சாசனம் செய்கின்றார். இவைபோக ஏனைய 101 தலங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்பர்கள் நெஞ்சில் புகுவதற்காகவே திருக்குடந்தை திருவெஃகா, திருவெள்ளூர், திருவரங்கம், திருப்பேர் நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத் தனையிலே கிடந்தருள்வது அன்பருடைய இதயத்தில் புகுவதற்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதேயாகும். எம்பெருமானுக்குப் பரமபதம், திருப்பாற் கடல், கோயில் (திருவரங்கம்), திருமலை, பெருமாள் கோயில் (காஞ்சி வரதராசர் கோயில்) முதலிய உகந்தருளின இடங் களில்இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய இதயத் தாமரையில் வாழ்வதே பெரு விருப்பமாகும். இதற் காகவே சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டு திவ்விய தேசங்களில் தங்கியுள்ளான். அன்பர்களின் நெஞ்சகத்தில்இடம் கிடைத்து விட்டால் திவ்விய தேச வாசத்தில் ஆதரம் மட்டமாய் இருக்கும். நம்மாழ்வாரும் இக்கருத்தினை,

4. நான். திருவந் - 36.