பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

அன்பில் திருவடி அழகிய நம்பி “கல்லும் கனைகடலும் வைகுந்தம் வான்நாடும் புல்என்று ஒழிந்தனகொல் ஏபாவம் வெல்ல நெடியான் நிறம்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம்" (கல் - திருவேங்கடமலை; கணை - ஒலிக்கும்; கடல் - திருப்பாற்கடல்; வான் நாடும் - வான் உலகம்; வெல்ல நெடியான் - மிக உயர்ந்தவன்) என்ற பாசுரத்தில் அருளிச் செய்துள்ளதை சிந்தித்துப் பார்க்கின் றோம். இந்நிலையில் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருப்பாசுரம் நம் நினைவிற்கு வர அதனையும் ஓதுகின்றோம். 'போற்றிசெய ஓர்குடைக்கீழ்ப் பொன்நாடும் இந்நாடும் நாற்றிசையும் ஆண்டாலும் நன்கில்லை-தோற்றமிலா எந்தைஅன்பில் ஆதி இணைத்தா மரைஅடிக்கே சிந்தையன்பு இலாதார் சிலர்' (போற்றி செய-வாழ்த்துக்கூற; நன்கு இல்லை-நன்மை உண்டாகாது; தோற்றம்- பிறப்பு: ஆதி-முழு முதற் கடவுள்; இணை -இரண்டு; சிந்தை-மனம்; அன்பு-பக்தி) அழியாப் பேரின்பத்தைப் பெற்று உய்யுமாறு எம்பெருமானிடத்து பக்தி செய்வதைவிட்டு அழிந்தொழியும் தன்மையதாகிச் சிற்றின்பத்திற்கே இடமான இந்திரபதவி முதலிய சிறப்புகளை ஒருங்கே அடைந்து எல்லா உலகங்களையும் தனிச் செங்கோல் செலுத்தும் பெருமை பெற்றாலும், அது நற்கதி பெறுவதற்குக் காரணம் ஆகாததால் அதனால் யாதொரு பயனும் இல்லை என்பது திவ்விய கவி உணர்த்தும் குறிப்பு. இத்திருக்கோயிலின் சுவரில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவையல்லாம் படியெடுக்கப்பெற்று விளக்கத்துடன் வெளியிடப்பெற்றுள்ளன. தேவையானவர்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் வெளியிடப்பெற்றுள்ள நூல்களை நாடிப் பெறலாம். அடுத்து, திருப்பேர் நகர் என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் பயணமாகின்றோம்.

5. பெரிய திருவந் - 68

6. நுாற். திருப். அந்-4 சுப்பு - 5