பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. திருப்பேர் கிடக்கும் திரு நாரணன் எம்பெருமானுடைய ஐந்து நிலைகளில் அந்தர்யா மித்துவம் ஒன்று. அந்தர்யாமித்துவம் என்பது எம்பெருமான் சேதநர்களின் ஆன்மாவினுள்ளே தன் சொரூபத்தாலே வியாபித்து நிற்பது. இங்குச் சேதநரின் எல்லாச் செயல்கட்கும் ஏவுபவனாக இருப்பான் எம்பெருமான். புண்ணியத்தின் காரணத்தால் சுவர்க்கம் செல்வதற்கும், பாவத்தின் காரணமாக நரகத்தில் பிரவேசிப்பதற்கும், இரண்டின் காரணமாகக் கருக்குழியிலே புகுவதற்குமான எல்லா நிலைகளிலும் இராமடம் ஊட்டுவாரைப் போல் சேதநரின் இதயத்தின் உள்ளே பதிந்து கிடந்து அவர்கட்கு எல்லாவகையிலும் துணையாய் நிற்கும் நிலையாகும் இது. சேதநர்க்குத் தியான ருசி பிறக்கும்போது தியானத்திற்கு உரியவனாக இருப்பான். துன்பம் நேரிடுங்கால் காப்பவனாக இருப்பான். இந்நிலையில் எம்பெருமான் அழகே வடிவெடுத்தாற் போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய் பெரிய பிராட்டியோடு கட்டைவிரல் அளவாக நம் இதயத் தாமரையில் வீற்றிருப்பான் என்று சாத்திரங்கள் பேசும். இந்நிலையை ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் பலபடியாகப் பேசுவர். விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார், 'பனிக்கடலில் பள்ளி - கோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ' (பள்ளிகோள்-பள்ளி கொள்ளல்) 1. மகன் ஒருவன் தன் தாயிடம் நேராகத் தனக்கு வேண்டு வனவற்றைப் பெறாமல் தன் அகந்தையினால் துன்புற்று உழலுங்கால், மகனைக் கைவிடுவதற்கு மனமில்லாத தாய் பிறர் அறியா வண்ணம் இரவில் அன்னம் இடும் சத்திரங்கட்குச் சென்று தன்முகம் காட்டாமல் மறைந்திருந்து அவனுக்கு அன்னம் இட்டு அவன் பசிப்பிணியை ஆற்றி அவனை உயிர்வாழச் செய்யும் அன்னை-இராமடம் ஊடுவார். 2. ருசி-பாவச்செயல்களையோ புண்ணியச் செயல்களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை, 3. பெரியாழ் திரு. 5.4:9.