பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பேர் கிடக்கும் திரு நாரணன் 51 என்று பேசுவர். இவரே பிறிதோரிடத்தில், “அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்றபிரான்' (அரவம் - பாம்பு; அமளி - படுக்கை; அரவிந்தப் பாவை - பெரிய பிராட்டியார்; பரவை - கடல்; திரை - அலை) என்று குறிப்பிடுவர். இந்த எண்ணங்களுடன் கொள்ளிடத்தின் வடகரை யிலுள்ள அன்பிலிலிருந்து ஆற்றைக் கடந்து அந்நதியின் தென் கரையிலுள்ள திருப்பேர் நகருக்கு வருகின்றோம். நாம் வந்தது கோடைக்காலத்து மே மாதமாதலால் மணலில் நடந்தே கடக்கின்றோம். மழைக்காலத்தில் காவிரியில் கரை கடந்த வெள்ளம்பெருக்கெடுக்கும்போது கொள்ளிடத்தில் நீரைத் திருப்பிவிடுவர். ஏனைய காலங்களில் நதியில் சிறிதளவு ஊற்று நீரே ஒடும். ஆற்றைக் கடக்குங்கால் சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டும். திருச்சியிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் கீழ் திசையில் உள்ளது இத் திருத்தலம். கல்லணைவரை பேருந்து வசதி உண்டு. அணையைத் தாண்டி வந்தால் கும்பகோணத்திலிருந்து திருவையாறு வழியாகக் கல்லணைக்கு வரும் பேருந்தில் சென்று இவ்வூரில் இறங்கலாம். இத்திருத்தலத்து எம்பெருமான் சேவை சாதிக்கும் திருக்கோயில் இருபது அடி உயரத்தில் அமைந்துள்ளது. திருமழிசையார் (ஒரு பாசுரம்), நம்மாழ்வார் (11 பாசுரங்கள்), பெரியாழ்வார் (3 பாசுரங்கள்), திருமங்கையாழ்வார் (22 பாசுரங்கள்) ஆகிய நான்கு ஆழ்வார்கள் இத்தலத்து எம் பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமழிசை யாழ் வார் பல தலங்களுடன் திருப்பேர் நகரின் பெயரையும் கூறி இவையெல்லாம் எம்பெருமான் அடியார்களின் மனத்தில் தங்குவதற்குரிய 'பாலாலயங்கள் ஆகும் என்கிறார். பெரியாழ் வார் குழந்தைக் கண்ணனே திருப்பேர் நகரில் கோயில்

4. மேலது 5.2:10,

5. நான். திருவந். 36.சுப்பு - 5