பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வைணவ சமயம் கூறும் அர்த்த பஞ்சக ஞானம் (பக். 31-33) சரீர - சரீரிபாவனை (பக். 36-39, 142-144) இதனை விளக்க ஈட்டாசிரியர் காட்டும் எடுத்துக் காட்டு (பக். 41-42), இறைவன் மூன்று காரணங்களாக இருக்கும் நிலை (பக். 46-47), பெரிய பிராட்டியாரின் புருஷகாரம் (பக். 68), நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தொகுக்கப் பெற்ற வரலாறு (பக். 74-75), வைணவ தத்துவ விளக்கம் (பக். 138-140) அழகின் தத்துவமே ஆண்டவன் தத்துவம் (பக். 152- 155) போன்ற கருத்துகள் நூலினைப் படிப்போருக்கு ஓரளவு வைணவதத்துவம் பற்றிய சிறு சிறு விளக்கங்களாக அமைந்திருப்பது போற்றத் தக்கது. ஆங்காங்குக் காட்டப் பெற்றுள்ள பாசுரங்களின் விளக்கம் படிப்போரிடம் பிரபந்தத்தைப் பயிலவேண்டும் என்ற அவாவை எழுப்புவதாக அமைந்துள்ளது. வியாக்கியாதாக்கள் கூறியுள்ள குறிப்புகளைச் சுட்டி உரைத்திருப்பது வியாக்கியானங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையை நம்மிடம் தூண்டுகின்றது. சுருக்கமாகக் கூறினால் இந்நூல் படிப்போருக்கு ஆராவமுதமாய், தெவிட்டாத தெள்ளமுதமாய் இனிக்கின்றது என்று கூறின், அது மிகையாகாது. பேராசிரியர் டாக்டர் ரெட்டியார் பலதுறை அறிவைப் பாடுபட்டுப் பெற்றவர். அத்துறைகளில் எல்லாம் பன்னூல்களை எழுதிக் குவித்திருக்கின்றார். இன்றும் எழுதிக் கொண்டே இருக்கின்றார். பதினேழு ஆண்டுகள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தன் முயற்சியால் நிறுவி அதன் தலைவராக இருந்து பணியாற்றியவர். இதில் இவர் எடுத்துக் கொண்ட முயற்சி பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பெறவேண்டியது. இவருடைய பல துறை அறிவு, ஆட்சித் திறன், விடா முயற்சி, எண்ணியதைச் செய்து முடிக்கும் திண்ணிய ஆற்றல் இவை யனைத்தும் ஒருங்கே யமைந்து ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவி அதைச் சிறப்புற வளர்க்கும் திறன் இவரிடம் அமைந்து கிடப்பதை நேரில் பார்க்கின்றேன். இத்தனைக்கும் மேலாக, இவருடைய தெய்வ பக்திக் கொப்பத் தமிழ் பக்தியும் இவரிடம் நிறைய உண்டு. பலதுறை அறிவு நூல்கள் தமிழில் பெருகினாலன்றி தமிழ் ஏற்றம் பெறாது என்ற அதிராக் கொள்கையை யுடையவர். இவர், எல்லாம் இறைவன் செயலால் தான் நடைபெறும் என்ற நம்பிக்கையுடையவர். சுமார் இருபதாண்டுகள் திருப்பதியில் தமிழ்ப் பணியாற்றியதால் திருவேங்கடவன் திருவருள் இவர்மீது வெள்ளங் கோத்திருப்ப у