பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நூல் முகம்

தாதுஆடு வனமாலை தாரானோ?
என்றுஒன்றே தளர்ந்தாள் காண்மின்.
யாதானும் ஒன்றுஉரைக்கில் எம்பெருமான்
திருவரங்கம் என்னும்; பூமேல்
மாதுஆளன் குடம்ஆடி மதுசூதன்,
மன்னர்க்குஆய் முன்னம் சென்ற
தூதாளன் என்மகளைச் செய்தனகள்,
எங்ஙனம்நான் சொல்லு கேனே?1

- திருமங்கையாழ்வார்

'சிதம்பரம் போகாமல் இருப்பேனோ?’ என்ற ஏக்கத்தைக் கொண்ட நந்தனாரைப்போல, ’என்று நான் டாக்டர் பட்டம் பெறுவேன்?’ என்று ஏங்கிக் கிடந்தேன். 1943இல் தொடங்கிய இந்த ஏக்கம் தொடர்ந்து என்னை வாட்டத் தொடங்கியது. 'ஊழிற் பெருவலி யாவுள?’ என்ற வள்ளுவர் வாக்கு என் எண்ண அலைகளின்மீது மேலோங்கி நின்றது. சென்னைப் பல்கலைக்கழக விதி என் ’தலைவிதி' போல் நின்று தடுத்தது.

புகல்ஒன்று இல்லா அடியேன்உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே'2

என்ற நம்மாழ்வாரின் திருவாக்கினைச் சிரமேற் கொண்டு, தமிழகத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் - தமிழ்த் துறைவர் பதவியைத் துறந்து திங்கள் தோறும் ரூ. 153 இழப்பில், திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பதவியை ஏற்றேன். 1960-ஆகஸ்ட் முதல் நாள். திருப்பதி வந்தது டாக்டர் பட்டம் பெறுவதற்கு, பயன் இல்லை. இங்கும் பல்கலைக்கழக விதி குறுக்கே நின்றது. எனினும் என் ஆசை

1. பெரி. திரு. 5.5 : 6

2. திருவாய். 6.10 : 1.0

vii