பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருக்குடந்தை ஆராவமுதன் திருக்குடந்தையில் நகரின் நடுவே அமைந்திருப்பது சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கோயில். இதில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் ஆரா அமுதன். இப்பெருமான் மீது நம்மாழ்வார் பாடியுள்ள 'ஆராஅமுதே' எனத்தொடங்கும் திருவாய்மொழியே 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்னும் பக்திப் பனுவல் கிடைப்பதற்கு ஒரு திறவுகோலாக இருந்தது. இது ஒரு சுவையான வரலாறு. - தில்லைச் சிற்றம்பலவன் திருக்கோயில் கொண்டிருக்கும் சிதம்பரத்துக்கருகில் சுமார் 25 கி.மீ. தொலைவில் காட்டு மன்னார் கோயில் என்ற ஒரு வைணவத் திருத்தலம் உண்டு. அதன் பழம்பெரும் பெயர் வீரநாராயணபுரம் என்பது. இத் திருத்தலத்து எம்பெருமான் மன்னனார் திருக்கோயிலில் அடிமைத்தொழில் செய்து வந்தவர்நாதமுனிகள் என்று வழங்கப்பெறும் அரங்கநாத முனிகள் (9-வது நூற்றாண்டு). ஒருநாள் மேல்நாட்டிலிருந்து வைணவர் இருவர் வந்து மன்னனாரைச் சேவித்து அவர் திருமுன் ‘ஆராவமுதே' எனத் தொடங்கும் பதினொரு பாசுரங்களையும் ஒதி நின்றனர். அருகிலிருந்த நாதமுனிகள் இப்பாசுரங்களின் இன்சுவையிலும் அவை நல்கும் பேரின்பத்திலும் ஈடுபட்டவராய் இறுதிப் பாசுரத்தில் 'ஆயிரத்தில் இப்பத்தும்” என வரும் தொடரால் இப்பாடல்கள் ஆயிரம் பாசுரங்கள் கொண்ட ஒரு பிரபந்தத்தில் உள்ளவை எனக் கருதி அப்பிரபந்ததைப்பற்றி அவர்களை வினவுகின்றார். அவர்கள் இந்தப் பதினொரு பாசுரங்களைத் தவிர தமக்கு வேறு யாதும் தெரியாது என மறுமொழி பகர்கின்றனர். இப்பிரந்தத்தை எப்படியாவது கண்டறிய வேண்டும் எனப் பேரவாக் கொள்ளுகின்றார் நாதமுனிகள். திருக்குடந்தை வருகின்றார். ஆராஅமுதனைச் சேவிக்கின்றார். அவன்மீதுள்ள திருவாய் மொழியை அவன் திருச்சந்நிதியின் முன் உளமுருக ஓதி அவன் திருவருள் பெற்று இத்திருவாய்மொழியின் இறுதிப் பாசுரத்தில் 1. திருவாய். 5-8.