பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குடந்தை ஆராவமுதன் 79 இசைந்து அப்படியே எழுந்திருக்க முயல்கின்றார். அது கண்ட ஆழ்வார் அர்ச்சாவதார சமாதி குலைய வொண்ணாது என்று திருவுள்ளம்பற்றி 'வாழி கேசனே' என்ற மங்களாசாசன முகத்தால் அப்படியே கிடந்தருளுமாறு வேண்டுகின்றார். எம்பெருமானும் தான் எழும் முயற்சியை நிறுத்திக் கொண்டாராம். இன்றைய அர்ச்சையில் 'தலை தூக்கிய நிலை விளங்குமாறு இருப்பதைக் காணலாம். இதனை 'உத்தான சயனம்’ என்று கூறுவர். இந்த ஆழ்வார் இத்திருத்தலத்தில் தங்கித் தவமியற்றித் திருநாடு அலங்கரித்தார் என்று அவர் வரலாறு தெரிவிக்கின்றது. ஆண்டாள் ஆராவமுதனிடம் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவர். கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின்மீது கட்டுமீறி காதல் கொள்கிறார். தன்வயம் இழந்து கிடந்த நிலையில் இவ்வாறு பேசுகின்றார்! ஆரே உலகத்து ஆற்றுவார்? ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆரா வமுதம் அனையான்தன் அமுதம் வாயில் ஊறிய நீர்தான் கொணர்ந்து புலராமே பருகி இளைப்பை நீக்கீரே." (கவர்ந்து - கொள்ளை கொண்டு; கார் ஏறு கறுத்த காளை உழக்க - இம்சிக்க; உழக்குண்டு - துன்பப்பட்டு; அமுதவாய் - அமுதம் சுரக்கின்ற வாய்; பருகி - பருகும்படி செய்து) திருமங்கையாழ்வாரும் ஆராவமுதனிடத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். இந்த ஆழ்வார் இத்தலத்துப் பெருமானை 'குடந்தை உத்தமன்’’’ என்கின்றார்; 'தன் குடந்தை நகராளன்' என்று பேசுகின்றார்; 'கொந்துலாம் பொழில் சூழ்க் குடந்தை தலைக்கோலினை... மறக்கேனே' என்று உளம் உருகப் பாடுகின்றார். 8. நாச். திரு 13 : 4. 9. பெரி. திரு 1.5 : 4. 10. மேலது 3.6 : 5.5 : 7 11. மேலது 7.3 : 3