பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி தெரியாது. தெரிந்தால் சொல்லுங்கள்” என்கின்றாள் (4). “பெற்றதாய் என்ற இரக்கம் கொள்ளவில்லை; தனக்குத் தகுந்த மாதவனைக் கொண்டாடிக்கொண்டு என்னை விட்டு நீங்கினாள்” (5). 'இவள் நமக்கு உதவியாயிருப்பள்” என்று வளர்த்தனால் பயன்பெறவில்லை. சிறிதேனும் என்பால் இரக்கம் கொண்டாள் இலள் என் தனிமைக்கும் இரங்கிற்றிலள், தேவர்கட்குத் துணையாய் இலங்கை சென்றவனுடன் சென்றுவிட்டாள்” (6). “தனக்குத் தாய் ஒருத்தி, தந்தை ஒருவன் இருப்பதாக நெஞ்சில் கொள்ளாமல் பின்னைப் பிராட்டியைக் கைப்பிடித்த பெருமானது தோளழகில் ஈடுபட்டு அவனோடு நடந்து சென்றுவிட்டாள்" (7). "என் மகள் பருவம் நிரம்பினவளும் அல்லள். நேற்றுவரை விளையாட்டுக் கருவிகளான முற்றில் (சிறுமுறம்), கிளி, பந்து, ஊசல் பூவைப் பறவை முதலியவற்றை ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாதவள். இவற்றையெல்லாம் துறந்து பிறப்பிலியின் பின் சென்றுவிட்டாள்” (8). “காவி மலர்களையொத்த கண்களை யுடையவள் கடிமலர்ப் பாவையொப்பாள், அன்ன நடையினைக் கொண்டவள்; மூங்கில் போன்ற தோள்களையுடையவள். பாவியேன் என் வயிற்றில் பிறந்தவளாதலால் தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்ற பழிச் சொல் புறப்படும் படியாகப் போக நேர்ந்தது (9). இச்செய்திகள் சங்கப் பாடல்களை நினைக்கச் செய்கின்றன. இங்ங்னம் ஆழ்வார்கள் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட வண்ணம் இருக்கும் நம்மை மாட்டுவண்டி திருக்கோயிலில் கொண்டு வந்து சேர்க்கின்றது. திருக்கோயிலில் நுழைந்து மேற்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் வயலாளி மணவாளனைச் சேவிக்கின்றோம். வயலாளி மணவாளனுக்குக் கல்யாணரங்கநாதன், வேதராசன் என்ற திருநாமங்களும் உண்டு. தாயாரின் திருநாமம் அமிர்தகடவல்லி என்பது. இவரையும் சேவித்து இவர்தம் திருவருளுக்குப் பாத்திரர்களாகிறாம். திருவாலியில் நரசிம்மர் சந்நிதி ஒன்று உண்டு. அங்கும் சென்று அந்த எம்பெருமானையும் வணங்குகின்றோம். இந்த நிலையில் பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருப்பாடல் நினைவிற்கு வர, அதனையும் ஓதி உளங்கரைகின்றோம். கழன்றுபோம் வாயுவினை கட்டாமல் தீர்த்தம் உழன்றுபோய் ஆடாமல் உய்ந்தேன்-அழன்று பொருவாலி காலன் பரகாலன் போற்றும் திருவாலி மாயனையே சேர்ந்து.” 29. நூற். திருப். அந், 18