பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணபுரத்துக் கருமணி 51 என்று கூறுவாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. எம்பெருமானுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தனது தலையில் சூட்டினால்தான் தனது காதல் நோய் தீரும் என்கின்றாள். ஆனால், பரகால நாயகி வண்டுகள் திருத்துழாயில் படிந்து வந்து ஊதினாற்போதும் என்கின்றாள். இவ்விடத்தில் மணிவாசகப் பெருமானின் திருக்கோத்தும்பி பதிகமும் சிந்திக்கத்தக்கது. இங்கு அடிகள் ஓர் அரச வண்டை நோக்கிப் பேசுகின்றார். தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்றுதாய் கோத்தும்பி.’ (தினைத்தனை - தினையளவு; உள்நெக - உள்உருக) “நீ மலர்தோறும் ஊதுவதால் கிடைக்கும் தேன் சிறிய அளவினது; எப்பொழுதும் மாளா இன்பத்தேன் சொரியும் குனிப்புடையான் திருவடித் தாமரைக்கண் சென்று ஊதுவாயாக. இந்தத் தேன் என்றும் பசியா இன்னமுதாய் என்பும் உருக்கி உணர்வினில் இனிது உயிர்க்கு ஒவா வளம் தரும்” என்று பேசுவர் அடிகள். பண்டிருந்து இப்படி வண்டினை (வண்டுகளை) விளித்துப் பேசுவது ஓர் இலக்கிய மரபாக இருந்து வருகின்றது. கண்ணபுரம் என்ற ஊரின் சிறப்பைப் பற்றியும் பேசுகின்றார் திருமங்கை மன்னன். “பெருகுசீர்க் கண்ணபுரம்” (8.2.3) என்கின்றார். எப்பொழுதும் இவ்வூரில் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஏராளமான வைணவர்கள் வந்து குழுமுவர். இதனை ஆழ்வார் “மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய கணம்” (8.73) என்று கூறுவர். இந்த வைணவர்கள் சதா சுருதியோடு கூடின அருமறைகளை ஒதிய வண்ணம் இருப்பர் (8.77); நாடோறும் தழல் வளர்த்து வாழும் அந்தணர்களும் (8.1-7) சாத்திரங்களைக் கற்ற வைதிகர்களும் வாழும் இடம் இது (8-18). 21. திருவாச. திருக்கோத். 3 22. பெரி. திரு. 8.1 முதல 8.10