பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வெள்ளக்குளத்து அண்ணன் இறைவனுடைய திவ்விய மங்கள உருவத்தைப் பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம் என்று ஐந்து நிலைகளாகப் பிரித்துப் பேசுவர் வைணவப் பெருமக்கள். அவற்றுள் பரத்துவம் என்பது காலம் நடையாடாததும், ஆனந்தம் அளவிறந்து ஒப்பற்றதாயுமுள்ள வைகுந்தத்தில் (நித்திய விபூதியில்) அயர்வறும் அமரர்கள் என்று வழங்கப்பெறும் அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் முதலான நித்திய சூரிகளும் இவ்வுலகத் தளைகளினின்று விடுபட்ட முக்தரும் அநுபவித்தற்கு உரியனாய் எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். வியூகமாவது, இவ்வுலகில் (லீலா விபூதியில்) அதன் படைப்பு, அளிப்பு, அழிப்பு இவற்றை நடத்துவதற்காகவும், சம்சாரிகட்கு வேண்டியவற்றை ஈந்து வேண்டாதவற்றைப் போக்கி அவர்களைக் காத்தற் பொருட்டும், வீடு பேற்றை விரும்பித் தன்னை இடையறாது சிந்திப்பவர்கட்கு அவர்களது தளைகளைப் போக்கித் தன்னை வந்து அடைவதற்குக் காரணமான பேரருளைச் சுரப்பதற்காகவும் வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யுமனன், அநிருத்தன் என்ற பெயர்களுடன் வடிவங்கொண்டு இருக்கும் நிலையாகும். இவற்றுள் வாசுதேவ உருவமான பரத்துவத்தில் ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ் என்ற ஆறு குணங்களும் நிறைந்திருக்கும். ஏனைய மூன்றில் அவரவர்கள் மேற்கொண்டிருக்கும் செயலுக்கேற்ப ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டு குணங்கள் விளக்கமாக இருக்கும். விபவ அவதாரங்கள் எண்ணிறந்தவை. அவற்றுள் ஆதி அம்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த இராமர், கிருட்டினர் முதலான அவதாரங்கள் யாவும் அடங்கும். இந்த அவதாரங்கள் இறைவனின் இச்சை காரணமாக ஏற்பட்டவை. இவற்றின் பலன் அடைந்தாரைக் காத்தல், அவர்களின் விரோதிகளைப் போக்குதல், வைதிக தர்மத்தை 1. திருவாய். 3.5:5