பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

ஒரு சமயம் நெற்குன்றங் கிழாரால், பஞ்சக் கொடுமையினால் அரசனுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்த முடியவில்லை. ஆகவே தம் மனத்துக்கினிய தலமாகிய திருப்புகலூர்க்குச் சென்றார். வரி செலுத்தாமையின் நெற்குன்றங் கிழாரைச் சிறைப்படுத்தற் பொருட்டு அரச னேவலரும் அங்குற்றனர் ; அரசனது ஆணையையும் அறைந்தனர். அது கேட்ட நெற் குன்றங் கிழார், திருப்புகலூர் இறைவனைக் கண்டு கும்பிட்டு வருவதாகக் கூறித் திருவதிகைக் கோயிலைச் சூழ்ந்துள்ள பொய்கையில் நீராடி விநாயகப் பெருமான் கோயிலே அடைந்து பின்வரும் பாடலைப் பாடினர் :—

“உரை செய் மறைக்கும் தலைதெரி யாவொரு கொம்பை யென்றே
பரசு மலர்க்குப் பெருநிழ லாக்கும் பழனமெல்லாம்
திரைசெய் கடற்றுரைச் சங்கமு லாவும் திருப்புகலூர்
அரசினிடத்து மகிழ்வஞ்சி யின்றவோர் அத்திநின்றே.”

அவ்வமயம் விநாயகப் பெருமானை வணங்க வந்த ஒரு மாது இப்பாடலக் கேட்டு மனமகிழ்ந்து, “இச்செய்யுளை ஒரு அந்தாதிக்குக் காப்பாக அமைத்தல் சாலவும் நன்று” என்றனள். நெற்குன்ற வாணர், “அங்ஙனமே ஆகுக ; அந்தாதிக்குக் காப்பாக்கினால் அரசிறைக்குப் பொருளாதல் யாங்ஙனம் ?” என்றார். அம்மாது, நெற்குன்றங் கிழார் கூறியதன் பொருளை அறியாது திகைக்க, அரச ஏவலர் செய்தியைக் கூறினர். அவள் நெற்குன்ற வாணர் செலுத்த வேண்டிய இறைப் பணத்தை முழுவதும் செலுத்தினாள். நெற்குன்ற வாணரும் மேலே காட்டிய பாடலையே காப்பாகக் கொண்டு திருப்புகலூர் அந்தாதி என்ற நூல் பாடி முடித்தார்.