பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

கல்வெட்டொன்று உள்ளது. அரசனுடைய நன்மையின் பொருட்டு அருளாகர ஈசுவர முடையாரை ஐந்தாவது ஆட்சியாண்டில் அரும்பாக்கிழான் எழுந்தருளுவித்தான். அக்கோயில் கட்டவும் திருமுற்றம் பூந்தோட்டம் ஆகியவை அமைக்கவும் திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தார் இக்கோயிலுக்கு நிலம் கொடுத்தனர் (175 of 1919).

நரலோகவீரன் மண்டபம்

திருப்புகலூர்த் திருக்கோயிலில் உள்ள மண்டபங்களுள் ஒன்றிற்கு நரலோகவீரன் மண்டபம் என்று பெயரிருந்ததென்று ஒரு கல்வெட்டு (97 of 1927-28) அறிவிக்கிறது. அம்மண்டபத்தில் ஊர்ச்சபை கூடிற்று. எனவே இப்பெருவீரர் பெயரால் ஒரு மண்டபம் விக்கிரம சோழனது ஆட்சியின் தொடக்கத்திலேயே கட்டப்பெற்றது என அறியலாம்.

நரலோகவீரநல்லூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் மருவாய்க் குரிச்சி என்ற ஊர் நரலோகவீரகல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பெற்றது என்று நாங்குனேரியிலுள்ள சுந்தர பாண்டியனுடைய கல்லெழுத்தொன்று (265 of 1927-28) கூறுகிறது. நரலோக வீரன் தென்னாட்டுக்குப் படையெடுத்துச் சென்று வென்றபொழுது அவ்வூர்க்குத் தன் பெயரமைத்தனன் என்று அறியலாம்.

இவன் மகன்

சூரைகாயகன் மாதவராயன் என்பவன் இம்மணவிற் கூத்தனுக்கு மகன் என்று தெரிய வருகிறது. திருப்பாசூரிலுள்ள கல்வெட்டொன்று (128 of 1930) இம்மாதவராயன் செய்த சிவத்தொண்டினைக் குறிப்பிடுகிறது.