பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

துணை அனுப்புமாறு வேண்ட, இலங்கையரசனாகிய பராக்கிரமபாகு ஜெகத் விஜய தண்ட நாயகன் என்பான் தலைமையில் பெரும் படையை அனுப்பினான். இவ்விரு படைத் தலைவர்களும், குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச் செய்து வீரபாண்டியனை மீண்டும் அரியணையில் அமர்த்தினார்கள். குலசேகர பாண்டியன் பன்முறை தோல்வி யுற்றமையால் மனம் நொந்து ஏறத்தாழக் கி. பி. 1167-ல் சோழ நாட்டிற்கு வந்து ‘‘என்னுடைய ராஜ்யம் நான் பெறும்படி பண்ண வேணும்‘‘ என்று இரண்டாம் இராசாதிராசனிடம் கேட்டுக் கொண்டான். இராசாதிராச சோழனும் திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். தொண்டி, பாசி முதலாகிய ஊர்களில் போர்கள் நடந்தன ; ஈழப்படை வெற்றி யெய்தியது. சோழ மண்டலத்திலும் மற்றுமுள்ள நாடுகளிலும் உள்ள மக்களெல்லாம் அஞ்சினார்கள்.

இதனையறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்பான் உமாபதி தேவராகிய ஞானசிவதேவர் என்பாரிடம் விண்ணப்பித்துக்கொள்ள அவரும் சிங்களப் படை தோல்வியுற்று ஓடவேண்டும் என்று 28 நாட்கள் இரவும் பகலும் தவங்கிடந்தார். இறைவன் திருவருளால் பெருமான் நம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வென்றன் ; சிங்களப் படைத் தலைவர்கள் இருவரையும் கொன்றான் ; அவர்கள் இருவர்களுடைய தலைகளையும் மதுரை வாசலிலே தைப்பித்தான். பிறகு குலசேகர பாண்டியனை மதுரையில் ஆட்சி செய்து வருமாறு செய்தான். (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் II, பக்கம் 128-131)