பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144


பல்லவராயனின் இறுதி

இங்ஙனம் பாண்டிய நாட்டுப் போரில் வெற்றி யெய்திக் குலசேகர பாண்டியனுக்கு மதுரையும் அரசும் அளித்துத் திரும்பிய சில காலத்துக்கெல்லாம் (ஏறத்தாழக் கி. பி. 1171-ல்) பெருமான் நம்பிப் பல்லவராயன் நோய்வாய்ப்பட்டு இறந்தான். இவனுக்குப் பிறகு இரண்டாம் இராசாதிராச சோழனுக்குத் தலைமை அமைச்சனாக வந்தவன் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் பழையனூர் நாட்டுப் பழையனூர் உடையான் வேதவன முடையான் அம்மையப்பனரான அண்ணன் பல்லவராயன்.

பல்லவராயன் பேட்டைச் சாசனம்

இரண்டாம் இராசாதிராச சோழனுடைய 8-ஆவது ஆட்சியாண்டில் இச்சாசனம் கொடுக்கப் பட்டது. கி. பி. 1171-ல் பெருமான் நம்பிப் பல்லவராயன் இறந்தபோது அவன் விருந்தங்களுக்கும் (மனைவியர்களுக்கும்), மக்களுக்கும், பெண் மக்களுக்கும், தாயார்க்கும், உடன் பிறந்தாளுக்கும், உடன் பிறந்தாள் மக்களுக்கும் இராசாதிராசன் குளத்தூரில் நாற்பதிற்று வேலிநிலம், வேதவனமுடையான் அம்மையப்பனாரான அண்ணன் பல்லவராயன் நிச்சயித்தபடி இரண்டாம் இராசாதிராச சோழனால் அளிக்கப்பட்டது. அங்ஙனம் அளிக்கப்பட்ட நிலத்தின் விவரம் பின்வருமாறு :—

I. மனைவியர்

1. சிற்றாலத்தூருடையான் மகளுக்கு 3 வேலி நிலம்
2. ஆலி நாடுடையான் மகளுக்கு 3 வேலி நிலம்