பக்கம்:சோழர் வரலாறு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

103



இவனுக்கஞ்சிக் காயசண்டிகை என்பவளது உருவத்தைப் பூண்டு அன்னதானம் செய்து வந்தாள் தன்னிடம் வந்த உதயகுமரனை அறமொழிகளால் தெருட்டினாள். உண்மை உணராத - காய சண்டிகையின் கணவனாக வித்தியாதரன், தன் மனைவி உதயகுமரனை நேசிப்பதாகத் தவறாக எண்ணினான். ஒர் இரவு மணிமேகலையைத் தேடிவந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான்; பிறகு தன் குற்றத்தை உணர்ந்து வருந்தித் தன் நாடு மீண்டான்.[1]

அரசன் மாணவீரன்: தன் தனிப்புதல்வன் இறந்ததைக் கேட்ட அரசன் அதற்குச் சிறிதும் வருந்தாமல், "இளங்கோனுக்கு யான் செய்ய வேண்டிய தண்டனையை வித்தியாதரன் செய்துவிட்டான்.

மாதவன் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனில் இன்றால்;

‘தன் ஒரு மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற சோழன் மரபில் இங்ஙனம் ஒரு கொடியவன் தோன்றினன்’ என்ற செய்தி சேர, பாண்டியர்க்கு எட்டு முன்னரே அவனை ஈமத்தேற்றி விடுக; அக்கணிகை மகளையும் சிறை செய்க" என்று தன் தானைத் தலைவனான சோழிக ஏனாதிக்குக் கட்டளையிட்டான்.[2]

அரசியும் மணிமேகலையும்: நெடுமுடிக்கிள்ளியின் மனைவியான சீர்த்தி என்ற கோப்பெருந்தேவி மணிமேகலையைச் சிறை நீக்கித் தன்னிடம் வைத்துக் கொண்டு அவளுக்குப் பல துன்பங்களைச் செய்தாள். அவள் ஒவ்வொன்றிலும் கட்டுப்படாதிருத்தலைக் கண்டு வெருண்டு. தன் குற்றத்தைப் பொருத்தருளுமாறு


  1. மணிமேகலை, காதை, 20.
  2. மணிமேகலை, காதை, 22, வரி, 205-215.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/105&oldid=482788" இலிருந்து மீள்விக்கப்பட்டது