பக்கம்:சோழர் வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சோழர் வரலாறு



வேண்டினாள்; பின் அறவண அடிகள் அறவுரை கேட்டு அரசமாதேவி மணிமேகலையை விட்டாள்.[1]

காஞ்சியில் மணிமேகலை: மணிமேகலை பல இடங்களிற் சுற்றிப் பெளத்த சமயத் தொண்டு செய்து வருகையில், காஞ்சிபுரத்தில் பசிக்கொடுமை தலைவிரித்தாடலைக் கேட்டு அங்குச் சென்றாள். அவளை இளங்கிள்ளி வரவேற்றான்; தான் கட்டியிருந்த புத்தர் கோவிலைக் காட்டினான்; அதற்குத் தென்மேற்கில் ஒரு சோலையில் புத்த பீடிகையை அமைத்து, பொய்கை எடுத்து, தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும் வழிபடற்குரிய கோவிலையும் அங்கு உண்டாக்கி, நாட்பூசை, திருவிழா முதலியன அரசனைக் கொண்டு நடைபெறுமாறு செய்வித்து, அறம் வளர்ப்பாள் ஆயினள்.[2]

அரசனும் பீலிவளையும்: ஒரு நாள் நெடுமுடிக்கிள்ளி பூம்புகார்க் கடற்கரையைச் சார்ந்த புன்னைமரக் சோலையில் பேரழகினளான மங்கை ஒருத்தியைக் கண்டு மயங்கினான்; அவளுடன் ஒரு திங்கள் அச்சோலை யிற்றானே உறைந்து இருந்தான். ஒரு நாள் அவள் திடீரென மறைந்து விட்டாள். அரசன் அவளைப் பல இடங்களிலும் தேடி அலைந்தான்; அவன் ஒருநாள் பெளத்த சாரணன் ஒருவனைக் கண்டு வணங்கி, “என் உயிர் போல்பவளாகிய ஒருத்தி இங்கே ஒளித்தனள், அவளை அடிகள் கண்டதுண்டோ?” என்று கேட்டான். அச்சாரணன், “அரச, அவளை யான் அறிவேன். அவள் நாக நாட்டு அரசனான வளைவணன் மகள் ஆவாள். அவள் பெயர் பீலிவளை என்பது. அவள் சாதகம் குறித்த கணி, ‘இவள் சூரியகுலத்து அரசன் ஒருவனைச் சேர்ந்து கருவுற்று வருவாள்’ என்று தந்தைக்குக் கூறினன். அவளே நீ கூறிய மடந்தை. இனி அவள் வாராள். அவள் பெறும் மகனே வருவான். இந்திர விழாச் செய்யாத நாளில்


  1. மணி, காதை 24.
  2. மணி, காதை, 28.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/106&oldid=1234331" இலிருந்து மீள்விக்கப்பட்டது