பக்கம்:சோழர் வரலாறு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

105



மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரத்தைக் கடல் கொள்ளும், இந்திரன் சாபமும் இருத்தலால் அது தப்பாது; ஆதலின், என் கூற்றை நம்பி, இந்நகரைக் கடல் கொள்ளாதபடி இந்திர விழாவை ஆண்டு தோறும் மவாது செய்து வருக” என்று கூறி அகன்றான்.[1]

புகார் அழிவு: புகார் நகரில் கம்பளச் செட்டி என்றொருவன் இருந்தான். அவன் நாகநாடு சென்றிருந்த பொழுது பீலிவளை, தான் பெற்ற மகனை அவனிடம் ஒப்புவித்தாள். அவன் அக்குழந்தையுடன் கப்பலில் வரும் பொழுது, கப்பல் தரை தட்டி உடைந்து விட்டது. வணிகன் உயிர் பிழைத்துப் பூம்புகாரை அடைந்தான். குழந்தை என்ன ஆயிற்று என்பது அவனுக்குத் தெரியாது. வந்த வணிகன் நடந்ததை அரசனுக்கு அறிவித்தான். சோழர் பெருமான் அது கேட்டு ஆற்றொனாத் துயர் அடைந்து, அக்குழந்தையைத் தேடி அலையலானான்; அவனது துன்ப நிலையில் இந்திர விழாவை மறந்தான். உடனே இந்திரன் - மணிமேகலா தெய்வம் இவர் தம் சாபங்களால் பூம்புகாரைக் கடல் கொண்டது[2] இந்த அழிவினால், மாதவி, அறவண அடிகள் முதலியோர் காஞ்சியை அடைந்தனர்.[3]

முடிவு: இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இந் நெடுமுடிக்கிள்ளியைப் பற்றி ஒன்றும் தெரிந்திலது. இவனுக்குப் பிள்ளைப் பேறு இன்மையால், இவனுக்குப் பின் சோழ அரசன் ஆனவன் இன்னவன் என்பது தெரியவில்லை.


  1. மணி, காதை 24.
  2. இந்தக் காலத்தில் நகரத்தின் ஒரு பகுதியே அழிந்து விட்டது.கி.பி.450-இல் புத்ததத்தர்பூம்புகாரில் இருந்தார் என்பதும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலும் புகார் நகரம் சிறப்புடன் இருந்தது என்பதும் அறியத் தக்கன.
  3. மணி, காதை, 29.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/107&oldid=482791" இலிருந்து மீள்விக்கப்பட்டது