பக்கம்:சோழர் வரலாறு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சோழர் வரலாறு


1. சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்


சங்க காலம்

ப்பொழுது ‘சங்க நூல்கள்’ என்று கூறப் பெறும் எட்டுத் தொகை , பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்பனவும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காப்பியங்களும் சங்ககாலச் சோழர் வரலாறுகளை அறியப் பெருந்துணை புரிவன ஆகும். ‘பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், களவழி போன்ற சிலவே சங்க காலத்தைச் சேர்ந்தவை, ஏனையவை பிற்பட்ட காலத்தவை - சமணர் சங்கத்தில் ‘இயற்றப் பட்டவை’ என்று ஆராய்ச்சி அறிஞர் தெளிவுறக் கூறலாம். பதினெண் கீழ்க்கணக்கில் ‘இனியவை நாற்பது’ போன்றவை பிற்கால நூல்கள் என்று கோடலில் தவறில்லை. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பனவே சங்காலச் சோழர் வரலாற்றுக்குப் பேருதவி புரிவன எனலாம். இவ்வுண்மையை அடுத்த பிரிவிற் காணலாம். இவற்றுடன் பிளைநி, தாலமி, பெரிப்ளுஸ் ஆசிரியர் முதலியோர் எழுதியுள்ள ‘செலவு நூல்கள்’ பயன்படுவன ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/11&oldid=954898" இலிருந்து மீள்விக்கப்பட்டது