பக்கம்:சோழர் வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

111



சோழர் முதலிய பெயர்கள்: சோழர் என்னும் சொல்லுக்குப் பொருள் காண முயன்றோர் பலர், பொருள் காண, முடியாத சொற்களில் ‘சோழ’ ஒன்றாகும் (நீர்) ‘சூழ்நாடு’ என்பது நாளடைவில் ‘சூழநாடு, சோழ நாடு என மாறியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது.[குறிப்பு 1] உலக்கை - ஒலக்கையாக மாறி வழங்கல் போல ‘சூ’ - ‘சோ’வாக மாறல், இயல்பே அன்றோ? இஃது ஆராய்ச்சிக்குரியது. சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன், செம்பியன் என்பன சிறந்தவை. ‘கிள், தோண்டு, வெட்டு’ என்னும் பல பொருள்களைக் குறித்து, ‘நிலத்தைத் தோண்டிவளம் செய்பவன்’ என்னும்பொருளில் வந்திருக்கலாம். வளமுடைய நாட்டான் வளவன் எனப்பட்டான். ‘சிபி’ மன்னன் மரபினர் செம்பியன் (சிபியன், செபியன், செம்பியன்?) எனப்பட்டார். சென்னி என்பதும் சோழர் பெற்ற பெயராகும்.சென்னி-தலை;“சிறப்புடையது” என்னும் பொருள் கொண்டு, சென்னி நாட்டிற் சிறந்தவன், அரசன் என்னும் பொருள்களில் வழங்கப் பெற்றதுபோலும்!

அரசன் இலச்சினை: வழிவழியாகச் சோழர்க்கு உரியது புலி இலச்சினை. சோழர் புலிக்கொடி உடையவர். காடே இல்லாத சோழ நாட்டில் புலி ஏது? மிகப் பழைய காலத்தில் இருந்த நாட்டில் வேந்தன் எவனேனும் முதன் முதல் புலியைக் கொன்ற பெருஞ் செயலை மதித்து, அதனைச் சிறப்புக் குறியாகக் கொண்டிருக்கலாம்; பின்னவர் அதனையே தமது மரபு இலச்சினையாகக் கொண்டனர் போலும்! இக்குறியைப் பற்றிய விளக்கம் சங்க நூற்களில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் தெலுங்க நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையைப் பெற்றிருந்தனர்.[1]


  1. இது பொருத்தமுடைய, பொருள் அன்று. இதன் பொருளை உணரப் பழைய எகிப்திய, கிரேக்க, மிநோவ வரலாறுகளை ஆராய்தல் நன்று.
  1. Ep. Indica, vol. 1 l, p.338.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/113&oldid=482441" இலிருந்து மீள்விக்கப்பட்டது