பக்கம்:சோழர் வரலாறு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

119



அரசன் பற்றிய விழாக்கள்: அரசன் பிறந்த நாள் விழா ஒவ்வோர் ஆண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். அப்பொழுது அரசர்கள் மங்கலவண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யா தொழிந்து, சிறைவிடுதல், சிறை தவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச்செயல்கள் செய்வர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும்.இங்ஙனமே அரசன் முடிபுனைந்த நாள் தொடங்கி ஒவ்வோர் ஆண்டிலும் முடிசூட்டு நாளும் கொண்டாடப்பெறும். இது முடி புனைந்து நீராடுதலின், மண்ணுமங்கலம் எனப்பெயர் பெறும்.[1] இதன் விரிவு தொல்காப்பியத்துட் காணலாம்.

முத்தமிழ் வளர்ச்சி: போர் ஒழிந்த ஏனை நேரங்களில் எல்லாம் அரசன் புலவருடனே இருந்து காலத்தை இன்பமாகக் கழித்தல் மரபு. புலவர் அவனுடைய சிறந்த இயல்புகளைப் புகழ்வர் குற்றங்கண்ட இடத்துக் கடிவர். இதற்குக் கோவூர் கிழாரே சான்றாவர். போர் ஒரே மரபினருக்குள் நடப்பினும் புலவர் சந்து செய்ய முற்படுவர்; பெரும்பான்மை வெற்றி பெறுவர். அரசன் போரில் வெற்றி பெற்று மீளின், அவனது பெருஞ் சிறப்பைப் பாடுவர்; அவன் இறப்பின், புலவர் சிலர் உடன் இறப்பர். அரசனது நாளோலக்கம் சிறப்புடையது. அங்கே ஆடுமகளிர், பாடுமகளிர், பாணர், கூத்தர் முதலியோர் ஆடல்பாடல்களில் பங்கெடுத்துக் கொள்வர். இப்பாணரால் இசைத்தமிழ் வளர்ந்தது. கூத்தரால் நாடகத் தமிழ் வளர்ந்தது; புலவரால் இயற்றமிழ் வளர்ந்தது. இங்ஙனம் ஒவ்வொரு மரபினரும் (சோழர் உட்பட) முத்தமிழைப் போற்றி வளர்த்தனர். தன்னைக் காணவரும்புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு அரசன் அவரவர் தகுதிக்கேற்றவாறு பரிசில் வழங்குவன்;


  1. N.M. Nattar’s Cholas', pp. 101-102.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/121&oldid=482460" இலிருந்து மீள்விக்கப்பட்டது