பக்கம்:சோழர் வரலாறு.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

129


 என்பதிலோ - மாதவி பாடிய கானல் வரிப்பாடல் நினைவு எழும் என்பதிலோ ஐயம் இல்லை; இல்லை!!

சாய்க்காடு: இது பாடல்பெற்ற சிவனார் கோவிலாகும். இது பெரு வழியில் ஏறக்குறைய ஒன்றரைக் கல் தொலைவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கிறது. அதைச் சுற்றி நீண்ட கூடம் கூரையுடைய தாய்ச் செல்கிறது. கோவிலுக்குக் கோபுரம் இல்லை. சுற்றுச் சுவர் பழுதுபட்டிருக்கிறது. கோவில் மாடக் கோவில் ஆகும். சிவனார்க்கு நேர் எதிரே உள்ள சிறு வாசல் யானை புக முடியாதது. அம்மனுக்கு எதிரே உள்ள வாசலே பொது வாசலாகும். அந்த வாசல் கல்தேர் உருளைகளுடனும் கற்குதிரைகளுடனும் காட்சி அளிக்கின்றன. தேருக்கு இரண்டு பக்கம் வாயிற் படிகள் இருக்கின்றன. அப்படிகள் மீது ஏறியே கோவிலுக்குள் செல்ல வேண்டும். பிராகார மட்டத்திற்கு உட்கோவில் மட்டம் ஆறடி உயரமானது. இவ்வழகிய கோவில் ‘சிலந்திச் சோழன்’ கட்டியதென்று அர்ச்சகர் அருளிச் செய்தார். கோவிலைச் சுற்றி முள் நிறைந்திருக்கின்றது. கோவில் நன்னிலையில் இராததற்கு தமிழ் மக்கள் - சிறப்பாகச் சைவ நன்மக்கள் கவனிப்பின்மையே காரணம் எனலாம். ‘சிவனடியார் பலர் புகழ்ந்து பாடிய சாய்க்காடு - பாடலும் ஆடலும் அறாத சாய்க்காடு என்று கி.பி. 650-இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற இக்கோவில் பழைமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. இஃது சிலந்திச் சோழன் கட்டியதெனின், இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எனக்கூறல் தவறாகாது. பூம்புகாரின் ஒரு பகுதி கடல் கொண்ட பின், எஞ்சிய பகுதிக்கும் சாய்க்காட்டிற்கும் இடையே காடு வளர்ந்து விட்டது என்பதை இயற்பகை நாயனார் வரலாற்றால் இனிதுணரலாம்.

பல்லவன் ஈச்சரம்: சாய்காட்டுக் கோவிலுக்கு அரை கி.மீ. தொலைவில் கடற்கரை நோக்கிப் போகும் பாதையில்

சோ. வ. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/131&oldid=482487" இலிருந்து மீள்விக்கப்பட்டது