பக்கம்:சோழர் வரலாறு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

135



உயரிய ஆடைகள் வெளிநாடுகட்குச் சென்றமை நோக்க, நாட்டில் பெரும் பகுதியோர் நெய்தற்றொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்னல் மிகையாகாது. நகரச் சிறப்புக் கூறியவிடத்துப் பலவகைத் தொழிலாளரும் குறிப்பிடப் பெற்றனராதலின், அவர் செய்து வந்த பலவகைத் தொழில்களும் இந்நாட்டில் நடைபெற்றன என்பதை நன்கு உணரலாம். உள்நாட்டு வாணிகம் பெரிதும் பண்டமாற்றாகவே இருந்ததென்னலாம். நெல்லே பெரும்பாலும் நாணயமாக இருந்தது. நெல்லைத் தவிர, அவரவர்க்குத் தேவையான பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருள்களைப் பெறும் பழக்கமும் இருந்து வந்தது. பிற்காலச் சோழ அரசியலிலும் நெல்லே சிறந்த பண்ட மாற்று வேலையைச் செய்து வந்தது. நாணயங்கள் இரண்டாம் படியினவாகவே கருதப்பட்டன.

சமய நிலை: சோழநாடு தொன்று தொட்டுச் சைவ நாடாகவே இருந்து வந்தது. அதற்கு அடுத்தபடியாக வைணவம் இருந்து வந்தது. பிற்காலக் களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் சிற்றரசாக இருந்த சோழரும் பல்லவரைப் போலவோ, பாண்டியரைப் போலவோ, சமயம் மாறினர் என்று கூற இதுகாறும் சான்று கிடைத்திலது. சிவன், முருகன் கோவில்கள், திருமால் கோவில் ஆகியன இருந்தன. இந்த நாட்டிற்கு புதியனவாகப் புகுந்த வடநாட்டுக் கொள்கைகள் பரவிய பிற்காலத்தில், இந்திரன், பலதேவன் முதலியோர்க்கும் அருகன், புத்தன் முதலிய தேவர்க்கும் கோவில்கள் தோன்றின. புகாரில் பல சமயங்கள் இருந்தன. பல சமயப் புலவர் இருந்தனர். ஆனால் அச்சமயங்கள் போரிட்டில; புலவர் போரிட்டிலர். எல்லாச் சமயத்தவரும் தத்தமது சமயக் கோட்பாடுகட்கேற்ற நேரிய வாழ்வை நடத்தி வந்தனர்.

கலப்புச் சமயம்: தொகை நூல்களில் பழைய பாக்கள் உண்டு. அவற்றில் பழந்தமிழர் தெய்வங்களே பேசப்பட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/137&oldid=482496" இலிருந்து மீள்விக்கப்பட்டது