பக்கம்:சோழர் வரலாறு.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

137



வேள்வி தமிழ்நாட்டில் செய்யப்பட்டது என்பதும், அறிவுடைத் தமிழர் அதனை நன்கு அறிந்திருந்தனர் என்பனவும் நன்கு விளங்குகின்றன.[1]

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதைச் சமண காவியமான சிலப்பதிகாரமும் பெளத்த காவியமாகிய மணிமேகலையுமே கூறுகின்றன எனின், அக்காலத் தமிழர் அங்ஙனமே கருதினர் எனக் கோடலில் தவறில்லை அன்றோ? இதனாற் பெரும்பாலான தமிழர் சைவர் என்பது கூறாதே அமையும் அன்றோ? வேங்கடமும் திருவரங்கமும் சிறந்த வைணவத் தளிகளாகச் சிலப்பதிகாரம் கூறலை நோக்கின் ஆய்ச்சியர் குரவையை அழுத்தமாக ஆராயின், சங்ககாலத்தில் வைணவமும் போற்றத்தக்க சமயமாக இருந்தது என்பதை நன்கறியலாம். இந்த இரண்டுடன் மேற்சொன்ன வேத சமயமும் சங்ககாலத் தமிழரிடம் கலக்கத் தொடங்கியது என்பது நடுநின்று ஆராய்வார் நன்கறிதல் கூடும்.

புகாரில் பெளத்த விகாரம், சமணப்பள்ளி முதலியன இருந்தன. இருதிறத்துப் பெரியாரும் தங்கள் சமய போதனைகளைப் பண்பட நடத்தி வந்தார்கள். பெருஞ் செல்வனாக விளங்கிய கோவலன் சமணன், இளங்கோ அடிகள் சமணர் மணிமேகலை செய்த கூலவாணிகன் சாத்தனார், பெளத்தர். மாதவியும் மணிமேகலையும் பெளத்த பிக்குணிகளாயிருந்தனர். இவற்றை நன்கு நோக்குகையில், சங்க காலத் தமிழகத்தில் அவரவர் விரும்பியவாறு சமயக் கொள்கைகளைப் பின்பற்ற முழுவுரிமை பெற்றிருந்தனர் என்பது நன்கு தெரிகிறதன்றோ?

சங்க காலத்துக் கோவில்கள்: சிவன், முருகன், திருமால், பலதேவன், மாசாத்தன் இவர்க்கும்; கற்பகத்தரு வெள்ளையானை, வச்சிரப்படை, ஞாயிறு, திங்கள் முருகன் வேல் இவற்றுக்கும் கோவில்கள் இருந்தன;


  1. புறம், 166.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/139&oldid=482498" இலிருந்து மீள்விக்கப்பட்டது