பக்கம்:சோழர் வரலாறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சோழர் வரலாறு



கயிலாசநாதர் கோவில், பரமேசுவர வர்மன் கட்டிய கூரத்துச் சிவன் கோயில் முதலியவற்றைக் கண்ணுற்ற பிற்காலச் சோழர் வானளாவிய விமானங்கொண்ட கோவில்களைக் கட்டினர். இக்கற்கோவில் சுவர்களிலும் தூண்களிலும் தரையிலும் ஏராளமான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன. கல்வெட்டுள்ள கோவில்கள் புதுப்பிக்கப் படுங்கால், அக்கல்வெட்டுகளைப் பிரதி செய்துகொண்டு புதிதாக அமைந்த கோவிலில் பொறித்தல் அக்கால மரபாக இருந்தது. சுதை, செங்கல் முதலியவற்றால் ஆகிய கோவில்களிலும் கல்வெட்டுகள் இருந்தன. கோவில்களில் உள்ள பலவகைச் சிற்பங்களைக் கொண்டு சோழர் சிற்பக் கலை உணர்வை அறியலாம்[1]. ஒவியங்களைக்[2] கொண்டு, சோழர்கால ஓவியக்கலை வளர்ச்சியை அறியலாம்; மக்களுடைய நடை, உடை, பாவனை, அணிகள் முதலியன அறியலாம். கோவில் கட்டட அமைப்பைக் கூர்ந்து நோக்கிப் பல்லவர் காலக் கட்டடக் கலை சோழர் காலத்தில் எங்ஙனம் தொடர்புற்று வளர்ந்து வந்தது என்பதை உணரலாம். எண்ணிறந்த பாடல்பெற்ற கோவில்கள் சோழர்களால் கற்கோவில்களாக மாற்றப்பட்டன. பெருஞ்சிறப்பும் பெற்றன, இக்கோவில்களை முற்றப் பரிசோதித்துச் சோழர்காலச் சிற்ப-ஒவிய-கட்டடக் கலைகளின் வளர்ச்சியைச் சிறந்த முறையில் ஆராய்ந்து நூல் எழுதினோர் எவரும் இல்லை என்பது வருந்தத்தக்க செய்தியாகும். சுருங்கக்கூறின், இன்று சோழர் வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்வன - வரலாற்றுக்கு மூலமாக அமைந்துள்ளன - கோவில்களே ஆகும்.


  1. 123 of 1900; Ep Ind. Vol. 7, pp. 145-146.
  2. தஞ்சைப் பெருவுடையார் கருவறைச் சுவர் மீதுள்ள சோழர்கால ஒவியங்கள் முதலியன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/14&oldid=480247" இலிருந்து மீள்விக்கப்பட்டது