பக்கம்:சோழர் வரலாறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

143



இவன் பெளத்தனாக இருந்ததாற்றான் சைவத்திற்குப் பெரும் பகைவனாக இருந்தான் போலும்!

“களப்பிரர் இடையீடு. அப்பொழுது பேரரசரும் சார்வபெளமரும் ஆண்டு மறைந்தனர். பின்னர்க் கடுங்கோன் களப்பிரரை விரட்டிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்” என்று வேள்விக்குடிப்பட்டயம் எடுத்து இயம்புகின்றது. இக்களப்பிரர், வழிவழியாக வந்த பிரம்மதேயத்தை அழித்தனர். அதனைக் கோச்சடையன் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் புதுப்பித்தான். இச்செயலைக் கொண்டும் களப்பிரர் தொடக்கத்தில் பெளத்தராகவும் சமணராகவும் இருந்தனர் எனக் கோடலில் தவறில்லை.

மணிமேகலை காலத்தில் சோழ நாட்டில் பூதமங்கலம் பெளத்தர்க்குரிய இடமாகக் குறிக்கப்பட்டிலது. ஆனால், களப்பிரர் காலத்தில் புத்ததத்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏறத்தாழக் கி.பி. 660-இல் புத்தர்கள் இருந்தனர்; சம்பந்தரோடு வாதிட்டுத் தோற்றனர் என்பதை நோக்க. கி.பி. 575-இல் களப்பிரர் வலியை அடக்கிப் பல்லவர் சோழ நாட்டை ஆண்டு வந்த பொழுதும் பூதமங்கலம் சம்பந்தர் காலம் வரை பெளத்த இடமாக விளங்கிவந்தது என்பதை அறியலாம். எனவே பூதமங்கல விஹாரம் களப்பிரர் காலத்தே தோன்றியதென்னல் தவறாகாது.

களப்பிரரும் சமணரும்: கி.பி. 470-இல் மதுரையில் திகம்பர சமணர் அனைவரும் கூடிச் சங்கம் ஒன்றை நிறுவினர். அதன் தலைவர் வச்சிரநந்தி ஆவர் என்று 'திகம்பர தரிசனம்' என்னும் சமணநூல் செப்புகின்றது. இக்காலத்திற் பாண்டிய நாட்டு அரசராக இருந்தவர் களப்பிரரே ஆவர். அவர்கள் காலத்தில் 'திகம்பர சங்கம்’ மதுரையிற் கூடியதெனின், அத்திகம்பர சமணரே சம்பந்தர் காலம் (கி.பி. 670) வரை பாண்டிய நாட்டில் பாண்டிய அரசனையும் தம் வயப்படுத்தி இருந்தனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/145&oldid=481843" இலிருந்து மீள்விக்கப்பட்டது