பக்கம்:சோழர் வரலாறு.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

155



இப்பெயர்களுள் பல பல்லவ மன்னர்கள் பெயர்கள் அல்லவா? நந்திவர்மன், முதல் நந்திவர்மனைக் குறிப்பது. சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன் என்பன பல்லவர் பெயர்கள். எனவே, இச்சோழர் தம் பேரரசர் பெயர்களைத் தாமும் வைத்துக் கொண்டனர் போலும்! மகேந்திர விக்ரமவர்மன் என்பவன் தன்னை 'முத்தமிழ் வேந்தன் தலைவன்’ என்று கூறியதை நோக்க, அவன் பல்லவர் பொருட்டு முத்தமிழ் மன்னரைப் பொருதனன் போலும் என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இறுதி அரசனான புண்ணிய குமரன் பிருதிவி வல்லபன் என்னும் பெயர் கொண்டிருத்தலால், சாளுக்கியர்பால் சார்பு கொண்டவன் போலும்! அவன் மனைவி பெயர் 'வசந்த போற்றிச் சோழ மாதேவி என்பது. இப்பெயரும் சாளுக்கியர் தொடர்பையே உணர்த்துகிறது.

இப்பட்டியலிற் கண்ட அரசர் அன்றி, சோழ மகா ராசாதி ராசன் விக்கிரமாதித்த சத்தியாதித்யன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி இளஞ்சோழமாதேவி என்பவள். அவன் பேரரசன் என்பது அவனது பட்டத்தால் விளங்குகின்றது. அவன் ரேனாண்டு ஏழாயிரத்துடன் சித்தவுட்[1] ஆயிரமும் சேர்த்து ஆண்டவன். இங்ஙனமே தெலுங்கு, கன்னடப் பகுதிகளிலும் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கூறிக்கொண்டு ஆண்டனர். இவற்றை நோக்கச் சங்ககாலச் சோழர் மரபு அழியாது தொடர்ந்து வந்தமை நன்கறியலாம்[2].

சோழரும் பெரிய புராணமும்: இந்த இருண்டகாலச் சோழரைப் பற்றிய குறிப்புகள் கூறத்தக்க சிறப்புடைய நூல்கள் பெரிய புராணமும் திருமுறைகளுமே ஆகும். தேவாரக் குறிப்புகளும் வழி வழியாகச் சோணாட்டில் பேசப்பட்ட குறிப்புகளும் அக்காலத்திலிருந்து இன்று


  1. இதன் ஒரு பகுதியே இன்று சித்தவட்டம் என்பது
  2. K.A.N. Sastry’s Cholas ‘Vol.1, pp. 124, 125.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/157&oldid=1233167" இலிருந்து மீள்விக்கப்பட்டது