பக்கம்:சோழர் வரலாறு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

167



பராந்தகன் ஏவலால் இவ்விரண்டு பாண அரசரையும் எதிர்த்துப் போராடி வென்றான். பராந்தகன் அவனுக்குப் பாணாதிராசன் என்ற பெயரைத் தந்து பாணப்பாடியை அவனது ஆட்சியில் விட்டனன் என்று சோழசிங்கபுரக் கல்வெட்டு கூறுகிறது.[1] தோற்றோடிய பாண அரசர் இராட்டிர கூட அரசனிடம் சரண்புக்கனர்.

வைதும்பருடன் போர்: வைதும்பர் என்பவர் ரேனாண்டு ஏழாயிரம் என்னும் நிலப்பகுதியை ஆண்டவர். ‘ரேனாண்டு’ என்பது கடப்பை, கர்நூல் கோட்டங்களைக் கொண்ட நாடு. வைதும்பர் தெலுங்கர். அவர்கள் பாணருடன் நட்புக் கொண்டவர். அதனால் பாணரை எதிர்த்த கங்கருடனும் துளம்பருடனும் போரிட்டவர். கி.பி. 915-இல் பராந்தகன் வைதும்பரைத் தோல்வியுறச் செய்து நாட்டைக் கைப்பற்றினான். அதனால் வைதும்ப அரசன் இராட்டிரகூட அரசரிடம் சரண்புகுந்தான்.

வேங்கி நாட்டுடன் போர்: வேங்கிநாடு என்பது கிருஷ்ணை, கோதாவரி, ஆறுகட்கிடையில் இருந்தது. அது பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு நெல்லூர்வரை பரவி விட்டது. பராந்தகன் தானைத் தலைவருள் ஒருவனான மாறன் பரமேசுவரன் என்பவன் சீட்புலி என்பவனைத் தோற்கடித்து நெல்லூரை அழித்து மீண்டான் மீள்கையில், தன் வெற்றிக்காகத் திருவொற்றியூர் இறைவற்கு நிலதானம் செய்தான். அவன் தானம் செய்த காலம் கி.பி. 941 ஆகும்.[2] சீட்புலி என்பவன் கீழைச் சாளுக்கிய இரண்டாம் பீமனின் சேனைத் தலைவன் ஆவன்.

துன்பத் தொடக்கம்: கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி கி.பி. 940-இல் இறந்தான். அவன் மகனான விக்கி அண்ணன் முன்னரே இறந்து விட்டதனால் பட்டம்


  1. Ep. Ind. Vol. 4.pp, 221-225, S.I.I. Vol. 2. No. 76.
  2. 160, 236 of 1912.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/169&oldid=491140" இலிருந்து மீள்விக்கப்பட்டது