பக்கம்:சோழர் வரலாறு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

சோழர் வரலாறு



வேண்டும். அப்பாவில் பராந்தகன் பாண்டி நாட்டையும் ஈழத்தையும் வென்று, பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் அந்தப்பாவில் தன்னைக் கோழிவேந்தன் (உறையூர் வேந்தன்), தஞ்சைக் கோன் என்று கூறியுள்ளான். இவனை மேற்கு எழுந்தருளிய தேவர் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் தலத்திற்கு மேற்கே ஒரு கல்தொலைவில் உள்ள ‘கண்டராதித்த சதுர்வேதிமங்கலம்’ என்ற நகரம் இவன் அமைத்ததே ஆகும்.

இவன் மனைவியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணியார். இவர் இராசராசன் ஆட்சியிலும் உயிரோடு இருந்தவர்; தம் கணவன், மகன், மருமகளார் பலர், சுந்தர சோழன் முதலிய எல்லாராலும் பாராட்டப்பட்டவர். இவர் தேவாரப்பாடல் பெற்றுள்ள பல கோவில்களைக் கற்கோவில்கள் ஆக்கினர்; பல கோவில்கட்கு ஆடை அணிகள் வெள்ளிப் பாத்திரங்கள் முதலியன அளித்தனர்; பல கோவில்கட்கு நிலங்களைத் தானமாக விட்டனர். இங்ஙனம் இவர் செய்துள்ள திருப்பணிகள் மிகப் பலவாகும். அவற்றை இறுதிப் பகுதியில் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் தலைப்பில் விளக்கமாகக் காணலாம்.

அரிஞ்சயன் : (கி.பி. 956 - 957) இவன் கண்டராதித்தன் தம்பி. கண்டராதித்தன் மகன் மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், இவன் தன் தமையனுக்குப் பின் பட்டம் பெற்றான்; ஆயின், சுருங்கிய ஆட்சி பெற்று மறைந்தவன். இவன் ‘பரகேசரி’ என்னும் பட்டம் பெற்றவன். இவனுக்கு மனைவியர் பலர் உண்டு. அவருள் வீமன் குந்தவ்வையார், கோதைப் பிராட்டியார் என்னும் இருவரும் நீண்டகாலம் இருந்து பல திருப்பணிகள் செய்தனர். வீமன் குந்தவ்வையார் கீழைச் சாளுக்கிய வீமன் மகள் என்பர் சிலர், அவ்வம்மையார் ‘அரையன் ஆதித்தன் வீமன்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/174&oldid=491153" இலிருந்து மீள்விக்கப்பட்டது