பக்கம்:சோழர் வரலாறு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சோழர் வரலாறு



சிற்றப்பனான அரிஞ்சயன் நாட்டை ஆண்டான், பின்னர் அவன் மகனான இரண்டாம் பராந்தகன் அரசன் ஆனான்; அவனுக்குப் பின் பெரு வீரனான ஆதித்த கரிகாலனே பட்டம் பெறவேண்டியவன். அவன் பட்டம் பெற்றால் தான் தன் வாழ்நாளில் அரசனாதல் இயலாதென்பதை அறிந்த மதுராந்தகன் (ஆதித்தனது சிற்றப்பன்) ஏதோ ஒரு சூழ்ச்சியால் ஆதித்தனைக் கொலை செய்துவிட்டான். சோணாட்டுக் குடிகள் ஆதித்தனுக்குத் தம்பியான அருள்மொழித் தேவனையே (இராசராசனை) பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை; தன் சிற்றப்புனான மதுராந்தகனுக்கு நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான்; அவனை அரசனாக்கினான்; தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். அவனுக்குப் பின் தானே அரசனாவன் என்னும் ஒப்பந்தப்படி இச் செயலைச் செய்தான்.[1]

உத்தம சோழன் - மதுராந்தகன் (கிபி 969 - 986) இவன் கண்டராதித்தன் மகன். இவன் அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்தரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம்.

உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவன் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள்


  1. Thiruvalangadu plates, S.I.I. iii.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/178&oldid=491297" இலிருந்து மீள்விக்கப்பட்டது