பக்கம்:சோழர் வரலாறு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

சோழர் வரலாறு



சேர்ந்து தம் மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி (கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[1] பட்டத்து அரசியார் ‘உரத்தாயன் சொரப்பையார்’ (கன்னடப் பெயர்) என்பவர். இவர் ‘அக்கமாதேவியார்’ என்றும் ‘மூத்த நம் பிராட்டியார்’ என்றும் அழைக்கப்பட்டனர். இவர் ‘திரிபுவன[2]மகாதேவியார்’ என்றும் பெயர் பெற்றனர். உத்தம சோழன் மனைவியர் அனைவரும் தம் மாமியார் பெயர் கொண்ட (தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள) ‘செம்பியன்மாதேவி’ என்னும் சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்கே பல தானங்களைச் செய்தனர். இதனால் இம்மரபினர் அப்பெருமாட்டியிடம் வைத்திருந்த அன்பு நன்கு விளங்குகிறதன்றோ? உத்தம சோழனுக்கு எத்துணை மக்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆயின், மதுராந்தகன் கண்டராதித்தர் என்பவன் ஒருவன் பெயர் மட்டும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அவன் இராசராசன் ஆட்சியில் கோவில்களை மேற்பார்த்து வந்தான்.

இதுகாறும் கூறப்பெற்ற அரசர் அனைவரும் மிகச் சுருங்கிய கால எல்லைக்குள் இருந்து மறைந்தோர் ஆவர். இவர்களது பெரு முயற்சியால் தொண்டை மண்டலம் மீட்கப்பட்டது. பாண்டிய நாடு சோழராட்சியிற் சேர்க்கப்படவில்லை. இவர்கட்குப் பின்வந்த இராசராச சோழனே சோழப் பேரரசன் விரிவாக்கி நிலை பெறச் செய்த பேரரசன் ஆவன்.


  1. 494 of 1925.
  2. புதுவையை அடுத்துள்ள ‘திரிபுவனை’ என்னும் சிற்றூர் பழங்காலத்தில் இவர் பெயராற்றான் அமைக்கப்பட்டதென்று கூறுவர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/180&oldid=1079257" இலிருந்து மீள்விக்கப்பட்டது