பக்கம்:சோழர் வரலாறு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

193


 அதிகாரிகள் முதலிய பல திறப்பட்ட அரசியல் அலுவலாளர் இராசராசன் ஆட்சியில் இடம்பெற்று இருந்தனர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக்கிடத்தல் காண்க. ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியில் விரிவு காண்க. பாண்டிய நாட்டுப் பழைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இராசராசன் காலத்தில் புதிய தமிழில் மாற்றி எழுதப்பட்டன என்பது இங்குக் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.[1]

இராசராசன் அரசியல் இன்றைய நாகரிக அரசியல் போன்றது. இவன் நாடு முழுவதும் அளப்பித்தான்; இறையிலி நிலங்களைப் பிரித்தான் பிற நிலங்கட்குத் தரம் வாரியாக வரிவிதிக்க ஏற்பாடு செய்தான்; வரியை வசூலிக்கப் பல அதிகாரிகளை ஏற்படுத்தினான்; எல்லா வகை வரிகளும் கவனிக்க உயர்தர அலுவலாளர் குழுவை வைத்தான். தனித்தனி மண்டல காரியங்களைக் கவனிக்கும் தனித்தனி அலுவலாளர் ஒருபால், எல்லா மண்டலங்களைக் கவனிக்கப் பேரலுவலாளர் ஒருபால் ஆக, அரசியல் அமைப்பு வியத்தகு வண்ணம் அமைந்திருந்தது. ஊர் அவைகள் ஊராட்சியைக் குறைவற நடத்தின. ஒவ்வொரு மண்டலத்தும் திறம்பட்ட படைகள் நிறுத்தப்பட்டன; எல்லைப் புறங்களில் காவற்படைகள் இருந்தன. புகழ்பெற்ற கப்பற் படை இணையின்றி இலங்கியது. சுருங்கக் கூறின், தென் இந்தியாவில் பேரரசை ஏற்படுத்திய பேரரசர்களில் இராசராசனே சிறந்தவன் என்னல் மிகையாகாது.

சமயக்கொள்கை : இராசராசன் சிறந்த சிவ பக்தன். இவன் கட்டிய பெரிய கோவிலே இதற்குப் போதிய சான்றாகும். எனினும், இவன், இந்தியப் பேரரசைப் போலவே தன்பெருநாட்டில் இருந்த எல்லாச் சமயங்களையும் சமமாகவே மதித்து நடந்தவன். பெரிய


  1. 455 of 1917.


சோ. வ. 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/195&oldid=482912" இலிருந்து மீள்விக்கப்பட்டது