பக்கம்:சோழர் வரலாறு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சோழர் வரலாறு



விமானத்தின் தெற்கிலும் வடக்கிலும் வாயில்கள் உள்ளன, அவை படிகளை உடையது. தெற்குவாசல் விக்கிரமன் திருவாசல் எனப்படும். (இப்பெயர் விக்கிரம சோழன் பெயரால் பிற்காலத்தில் வழங்கப் பெற்றது போலும்) இவ்வாயிலின் கீழ்ப்பாகத்துத் திருமகள் வடிவமும் வடக்கு வாயிலின் கீழ்ப்பாகத்து நாமகள் வடிவமும் வனப்புறத் திகழ்கின்றன. திரு அணுக்கன் திருவாயில் இருபுறமும் அமைந்த படிகளாலேயே முன்னாளில் சந்நிதியை அடைவது வழக்கம். இப்படிகளே கோவில் எடுப்பித்த போது உடன் உண்டானவை. இக்காரணம் கொண்டும் நிலப் பரப்புக்குமேல் உயர்ந்த மேடையில் நிறுவப் பெற்ற தன்மையினாலும் இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ற இலக்கணம் பெற்றதென்னலாம். திரு அணுக்கன் திருவாயிலுக்கு எதிரே இப்போதுள்ள நேரான படிகள் பிற்காலத்தில் சரபோசி மன்னன் காலத்தன ஆகலாம். கோவிலின் நீட்டளவு 265 மீ) குறுக்களவு 132.மீ[1].

சிவலிங்கம் : உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப் பெரியது. அதற்கு ஆதிசைவரைக் கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்தபொழுது, ஆவுடையார் வடிவம் பெரியதாதலின், மருந்து இளகிப் பந்தனமாகவில்லை. இராசராசன் மனம் கவன்றான். அக்கவலையை நீக்கக் கருவூர்த் தேவர் என்னும் சைவமுனிவர் எழுந்தருளிச் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்துச் செவ்வனே நிறுத்திப் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர்ப் புராணம் கூறுகிறது. இக் கருவூரார் தஞ்சை இராசராசேந்திரன் மீது பதிகம் பாடியுள்ளார். அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இப்பெரியார் இக்கோவிலிற்றானே சமாதி ஆயினர். இராசராசேச்சரத்து மேலைத் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய மேடை ஒன்று இருக்கிறது. அதன் அருகில்


  1. I.M.S. Pillai’s Solar Koyir Panikal' pp. 20-21.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/198&oldid=482922" இலிருந்து மீள்விக்கப்பட்டது