பக்கம்:சோழர் வரலாறு.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

சோழர் வரலாறு



அரசனுக்கு நடுவர் மொழி பெயர்த்தனர். அரசன் அவர்களைத் தன் அரண்மனைக்கு அடுத்திருந்த விடுதியில் தங்கவிட்டான். அவர்கள் சென்ற காலத்தில் சீன அரசனது பிறந்தநாள் விழா நடந்தது. அரசன் அவர்கட்குப் பல பல பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினான். இக்குறிப்புச் சீனர் நூல்களிற் காணப்படுகிறது.

விருதுப்பெயர்கள் : இராசராசன் கொண்ட விருதுப் பெயர்கள் மிகப் பலவாகும். இராசராசன், மும்முடிச் சோழன்[குறிப்பு 1], மும்முடிச் சோழன்[1], சயங்கொண்ட சோழன்[2] என்னும் பெயர்கள் மண்டலப் பெயர்களாகவும் வளநாடுகளின் பெயர்களாகவும் வழங்கின. இவையன்றி, இராசராசற்குச் சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், க்ஷத்திரிய சிகாமணி, ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராசாச்ரயன், இராச மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய குலாசனி[3], கேரளாந்தகன், சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்க குல காலன் முதலியனவும் வழக்கில் இருந்தன. இப்பெயர்கள் பல சேரிகட்கு[4] இடப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறிவோம். சான்றாகத் தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள திருக்களித்திட்டையில் பின்வரும் பெயர்கொண்ட சேரிகள் இருந்தன; அருள்மொழிதேவச் சேரி, ஜனநாதச் சேரி, நித்தவிநோதச் சேரி, இராசகேசரிச் சேரி, நிகரிலி சோழச் சேரி, அழகிய சோழச் சேரி,


  1. மும்மடங்கு பலமுடையவன்; அஃதாவது தன் முன்னோர் பெற்றிருந்த அரசியல் வன்மைபோல மும்மடங்கு வன்மை பெற்றவன் என்பது பொருள்.
  1. சேர, சோழ, பாண்டியர் முடிகளை ஒன்றாக அணிந்த பேரரசன்.
  2. இப்பெயர் கொண்ட ஊர் திருச்சிக் கோட்டத்தில் இன்றும் இருக்கிறது.
  3. பாண்டிய மரபிற்கு இடியேறு போன்றவன்.
  4. Wards
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/208&oldid=484320" இலிருந்து மீள்விக்கப்பட்டது