பக்கம்:சோழர் வரலாறு.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

207



சிங்களாந்தகச் சேரி, குந்தவ்வை சேரி, சோழகுல சுந்தரச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி, இராசராசச் சேரி என்பன[1].

குடும்பம் : இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார்[2]. இந்த அம்மையாரே திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்...[3] என்பது காணப்படலால், இரணியகருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப் பெற்றன[4]. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும்.


  1. 292 of 1908.
  2. 42 of 1907
  3. 635 of 1902
  4. S.I.I. Vol. 2. part 2. p. 155
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/209&oldid=484710" இலிருந்து மீள்விக்கப்பட்டது