பக்கம்:சோழர் வரலாறு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

215



தன் மக்களையே மண்டலத் தலைவர்கள் ஆக்கி வைத்தமையால், பேரரசு குழப்பம் இன்றிச் செவ்வனே நடைபெற்று வந்தது.

போர்ச் செயல்கள் : இராசேந்திரன் காலத்துப் போர்ச் செயல்கள் மூன்றுவகையின. அவை (1) இவன் இளவரசனாக இருந்து நடத்தியவை, (2) அரசனாக இருந்து நடத்தியவை, (2) இவன் காலத்தில் இளவரசனான இராசாதிராசன் நடத்தியவை எனப்படும். முதற் பிரிவு இராசராசன் வரலாறு கூறும் பகுதியிற் காணலாம். இரண்டாம் பகுதியை இங்கு விளக்குவோம்.

இடைதுறை நாடு : இது கிருஷ்ணைக்கும் துங்க பத்திரைக்கும் இடைப்பட்ட சமவெளி. அஃதாவது இப்போது ‘ரெய்ச்சூர்’ எனப்படும் கோட்டம் என்னலாம்.[1] இஃது ‘எடதொறே இரண்டாயிரம்’ என்று கன்னடர் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

கொள்ளிப் பாக்கை : இஃது ஐதராபாத்துக்கு நாற்பத்தைந்து கல் வடகிழக்கே உள்ளது. இதன் இன்றைய பெயர் ‘கூல்பாக்’ என்பது. இது ‘கொள்ளிப் பாக்கை ஏழாயிரம்’ எனப்படும். இந்நாடு 13-ஆம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்தது.[2] இதன் மதில் சுள்ளிமரங்கள் நிறைந்தது. இஃது ஆறாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் அவனுடைய மகனான மூன்றாம் சோமேசுவரனால் ஆளப்பட்டு வந்தது.

மண்ணைக் கடக்கம் : இஃது இராட்டிரகூடர்க்குக் கோநகராக இருந்த இடம். இது, பிறகு வந்த மேலைச் சாளுக்கியர்க்கும் சிறிதுகாலம் தலை நகரமாக இருந்தது. வடக்கே பரமார அரசரும் தெற்கே சோழரும் இதனைத் தாக்கத் தாக்க, சாளுக்கியர் தமது தலைநகரைக் கலியான


  1. Ep. Ind. Vol. 12, pp.295-296.
  2. J.A.S., 1916, pp.-17.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/217&oldid=491302" இலிருந்து மீள்விக்கப்பட்டது