பக்கம்:சோழர் வரலாறு.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

217


1029-இல் இறந்தான். இப்போரினால் ஈழநாடு முற்றிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. இராசேந்திரன் கல்வெட்டுகள் இலங்கையிற் கிடைத்துள்ளன.[1]

சோழ நாட்டில் இறந்த மஹிந்தனது மகன் மறைவாக ஈழத்தவரால் வளர்க்கப்பட்டான். அவன் தன் தந்தை சோணாட்டில் மடிந்ததைக் கேட்டு, ரோஹணப் பகுதிக்குத் தானே அரசனாகி, முதலாம் விக்கிரமபாகு என்னும் பெயருடன் கி.பி. 1029 முதல் 1041 வரை ஆண்டுவரலானான்.[2]

தென்னாட்டுப் போர் : பாண்டியநாடு இராசராசன் காலத்திற்றானே அடிமைப்பட்டுவிட்டது. அப்படி இருந்தும், ‘இராசேந்திரன் அங்குச் சென்று பாண்டியனைத் தோற்கடித்து விரட்டி, அந்நாட்டை ஆளத் தன் மகனான சுந்தர சோழனை நிலைநிறுத்தி மீண்டான். பிறகு பரசுராமனது சேர நாட்டைக் கைக்கொள்ளப் பெரும்படையுடன் மலையைத் தாண்டிச் சென்றான்; அங்கு இருந்த அரசருடன் போர் செய்து வென்றான்; கிடைத்த நிதிக்குவியல்களுடன் தன் நாடு திரும்பினான்’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இதனுடன் இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஸ்ரீ வள்ளுவர் என்னும் பெயர்கொண்ட ஸ்ரீ வல்லப பாண்டியன் மனைவி திருவிசலூர்க்கோவிலுக்கு நிவந்தம் கொடுத்தாள்[3] என்பதையும் இராசேந்திரன் மதுரையில் பெரிய அரண்மனை ஒன்றைக் கட்டினான்[4] என்பதையும் நோக்க, சோழர் ஆட்சியில் இருந்தபோதிலும், பாண்டியர் தலைமறைவாகப் பாண்டிய நாட்டில் இருந்து கொண்டே கலகம் விளைத்தனரோ என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இராசேந்திரன், இராசராசனைப் போலக் காந்தளூர்ச் சாலையில் கலம்


  1. 595, 618 of 1912.
  2. Chola Vamsam, Chap. 55
  3. 46 of 1907
  4. 363 of 1917
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/219&oldid=1233377" இலிருந்து மீள்விக்கப்பட்டது