பக்கம்:சோழர் வரலாறு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சோழர் வரலாறு



வேண்டும். அவர்தம் வடமொழிச் சொற்களும் வழக்கில் வேரூன்றியிருத்தல் வேண்டும். இன்றேல்,

     “வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ
     எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.”

எனவும்,

     “சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்”

எனவும்,

முறையே வடசொற் கலப்புக்கும் பிராக்ருதக் கலப்புக்கும் தொல்காப்பியர் விதிகள் செய்திரார் என்க. இந்நிலை உண்டாக ஏறத்தாழ 300 அல்லது 400 ஆண்டுகள் ஆகி இருத்தல் இயல்பே ஆகும் அன்றோ?

மேலும் தொல்காப்பியர் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று புகழப்பட்டவர். ஐந்திர இலக்கண நூலுக்கு மிகவும் பிற்பட்டது பாணினீயம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. பாணினி காலம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்பர் கோல்ஸ்டகர் என்னும் அறிஞர். பாணினியமே பிற்கால வடமொழி உலகைக் கொள்ளை கொண்ட இலக்கண நூலாகும். அந்நூல் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் இருந்திருப்பின், அவர் ‘பாணினியம் நிறைந்த தொல் காப்பியன்’ எனப் பெயர் பெற்றிருப்பார். அங்ஙனம் இன்மையால், தொல்காப்பியர், பாணினியம் தமிழகத்துக்கு வராத காலத்தில் இருந்தவர் எனக் கொள்ளலாம்.

‘தொல்காப்பியர் காலத்தில் கவாடபுரம் (அலை வாய்) கடல்கோளால் அழிந்தது’ என்று இறையனார் களவியல் உரை கூறுகின்றது. இக்கடல்கோளுக்கும் இலங்கையில் நடந்த கடல்கோள்களுக்கும் நெருங்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/22&oldid=480280" இலிருந்து மீள்விக்கப்பட்டது