பக்கம்:சோழர் வரலாறு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

219



‘மத்திய பிரதேசத்தில்’ உள்ள பஸ்தர் சமஸ்தானத்தின் தலைநகரமான இராசபுரத்திற்கு 12 கிமீ தொலைவில் உள்ள ‘சித்திரகோடா’ என்னும் ஊராகும்[1]. இந்தப் பகுதியிற்றான் மதுரமண்டலம் (ஒரிஸ்ஸாவில் உள்ள ‘மதுபன்’ என்பது), நாமனைக்கோலம், பஞ்சப் பள்ளி ஆகிய இடங்களும் இருந்திருத்தல் வேண்டும். (2) ஆதிநகரில் இந்திராதனை வென்று கோசல நாட்டையும் காடுகள் செறிந்த ஒட்டரதேசத்தையும் கைக்கொண்டான். திருவாலங்காட்டுச் செப்பேடுகள், இராசேந்திரன் ஒட்டரதேசத்து அரசனைக்கொன்று, அவன் தம்பியிடம் பன்மணிக்குவியலைத் திறைகொண்டான் என்று குறிக்கின்றன. (3) பிறகு, இவன், தன்மபாலனது தண்டபுத்தி இரணசூரன் ஆண்ட தென்லாடம், கோவிந்தசந்திரன் ஆண்டகிழக்கு வங்காளம் இவற்றை முறையே அடைந்தான். தண்டபுத்தி என்பது ஒட்டர தேசத்துக்கும் வங்காளத்துக்கும் நடுவில், சுவர்ணரேகையாற்றுக்கு இருகரையிலும் உள்ள நாடு[2]. இது படைகாப்பாக ஒரு தலைவனுக்குக் கொடுக்கப்பட்டு அவனால் நுகரப்பட்ட நிலம்’ எனக் கொள்ளலாம். வங்காளத்தில் ஒரு பகுதி ராடா எனப்பட்டது. அதுவே கல்வெட்டு குறிக்கும் லாட தேசம் ஆகும். இம்மூன்று நாடுகளையும் ஆண்ட அரசர்கள் ஏறத்தாழ வரலாற்றில் இடம்பெற்றவரே ஆவர். ஆதலின், இவர்கள் பெயர்கள் பொய்ப்பெயர்கள் அல்ல. மகிபாலன் வங்க நாட்டை ஆண்டுவந்தான். அவன் சோழர் தானைத் தலைவனது சங்கொலிக்கு அஞ்சிப் போர்க்களம் விட்டு ஓடிவிட்டான். உடனே சோழர் சேனைத் தலைவன் அவ்வரசனுடைய யானைகளையும் பெண்டிர் பண்டாரங்களையும் பற்றிக் கொண்டு கங்கைக்கரையை அடைந்தான்.

தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் கொண்டுவரப்பட்டது[3]. இது மிகைபடக் கூறலோ,


  1. Ep. Ind. Vol. 9, pp. 178-9.
  2. R.D. Banerji’s ‘Palas of Bengal’, p.71
  3. Kanyakumari Inscription
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/221&oldid=491308" இலிருந்து மீள்விக்கப்பட்டது