பக்கம்:சோழர் வரலாறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

21


தொடர்புண்டு என்பதை அனைவரும் ஒப்புகின்றனர். இலங்கையை அழித்த கடல்கோள்கள் பல. அவற்றுள் முதலில் நடந்தது கி.மு. 2387-இல் என்றும், இரண்டாம் கடல்கோள் கி.மு. 504-இல் நடந்தது என்றும், மூன்றாம் கடல்கோள் கி.மு. 306-இல் நடந்தது என்றும் மகாவம்சம், இராசாவழி என்னும் இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவற்றுள் இரண்டாம் கடல்கோளாற்றான் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்று இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இங்ங்னம் இலங்கையின் பெரும் பகுதியை அழித்த அக்கடல்கோளே கபாடபுரத்தை உள்ளிட்ட தமிழகத்துச் சிறு பகுதியை அழித்திருத்தல் கூடும் என்று கோடலில் தவறில்லை. மேலும், மேற்கூறப்பெற்ற பல காரணங்கட்கும் ஏற்புடைத்தான காலம் இரண்டாம் கடல் கோள் நிகழ்ந்த காலமாகவே இருத்தல் வேண்டும் என்பதை நன்கறியலாம். இன்ன பிற காரணங்களால், தொல்காப்பியர் காலம் ஏறக்குறைய கி.மு. 5-ஆம் நூற்றாண்டு[1] எனக் கோடல் பல்லாற்றானும் பொருத்தமாதல் காண்க.

தொல்காப்பியர்க்கு முற்பட்ட நூல்கள்

தொல்காப்பியர் தமது பேரிலக்கண நூலில் 100-க்கு 16 வீதம் உள்ள சூத்திரங்களில் தமக்கு முன் இருந்த இலக்கண ஆசிரியரைச் சுட்டிச் சொல்கின்றார். “யாப்பென மொழிவர் யாப்பறி புலவர்” “... புலவர் ஆறே" என்றெல்லாம் கூறுதலை நன்கு சிந்திப்பின், தொல்காப்பியர்க்கு முன் இலக்கணப் புலவர் பலர் இருந்தனர் என்பது வெள்ளிடைமலை, எண்ணிறந்த இலக்கண நூல்கள் இருந்தன எனின், - 'இலக்கியம் கண்டதற்கு


  1. Vide ‘Tamil Polil’, Vol. 13 py. 289, 300; Vol. 15, article on ‘Tolkappiyam and the Sangam Literature’. தொல்காப்பியர் காலம் கி.மு. 300 ஆக இருக்கலாம் என்பவர் ரா. இராகவையங்கார். - Vide his Tamil Varalaru.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/23&oldid=480282" இலிருந்து மீள்விக்கப்பட்டது