பக்கம்:சோழர் வரலாறு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

சோழர் வரலாறு



மண்டபமாகும். அர்த்த மண்டபம் இருவரிசைகளாலான பெரிய சதுரக் கற்றுாண்களாலானது. விமானம் 60 மீ. உயரமுடையது. கோவிலின் அடிப்பாகம் 30 மீ சதுர மானது. இதன் உயரம் 10 மீ. இரண்டு மேல் மாடிகளை உடையது, இதற்குமேல் உள்ள பகுதி எட்டு மாடிகள் உள்ளதாய் விளங்கும்.

லிங்கம் : லிங்கம் 13 முழச் சுற்றுடையது; பீடம் 30 முழச் சுற்றுடையது; லிங்கத்தின் உயரம் 4 மீ. பீடத்தைத் தாங்கச் சிறிய கற்றுாண்கள் உள்ளன. பீடம் இரண்டாக வெடித்துள்ளது. மூல அறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றின் அகலம் 3 மீ. ஆகும். இது கோவில் தரை மட்டத்திற்குமேல் 6 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

அர்த்த மண்டபம் : அர்த்த மண்டபத்துத் துாண்கட்கு மேல் நடனச் சிலைகள் பல செதுக்கப்பட்டுள்ளன. அவை பலவகை நடன நிலைகளைக் குறிக்கின்றன. இலிங்கத்தை நோக்கிய எதிர்ச்சுவர் மீது (காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சுவரில் உள்ள சிற்பங்கள் போல) 6 வரிசைச் சிற்பங்கள் இருக்கின்றன. அவை, (1) சண்டீசர் வரலாறு (2) தடாதகை திருமணம் (3) பார்த்தனும் பரமனும் போரிடல் (4) மார்க்கண்டன் வரலாறு முதலியன உணர்த்துகின்றன. அவை அனைத்தும் உயிர் ஒவியங்களாகக் காட்சி அளிக்கின்றன.

மகா மண்டபம் : இத்தகைய மண்டபமே பிற்கால ஆயிரக்கால் மண்டபத்திற்கு அடிகோலியதென்னலாம். இங்கு சம்பந்தர் கற்சிலை மிக்க அழகோடு காணப்படுகிறது, துர்க்கையம்மன் சிலை அற்புத வேலைப்பாடு கொண்டது. நவக்கிரக அமைப்பு வேறெங்கும் காணப்படாத புதுமை வாய்ந்தது. சூரியன் தேர்அட்டதிசைப் பாலகர் - அவர்க்கு மேல் நவக்கிரக அமைப்பு-நடுவண் பதும பீடம், இவை அனைத்தும் ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/232&oldid=491320" இலிருந்து மீள்விக்கப்பட்டது