பக்கம்:சோழர் வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

சோழர் வரலாறு



ஒரு தனி நிலை எய்தியுள்ளது என்பதைக் கூறலாம்[1]. இச் சிற்பங்களின் விரிவு சோழர் சிற்பங்கள் என்னும் பிரிவில் விளக்கப்பெறும்.

மாளிகை மேடு[குறிப்பு 1] : இந்த இடம் அரண்மனை இருந்த இடமாகும். இது மிகப் பரந்த இடத்தில் அமைந்துள்ளது, இப்போது இவ்விடம் திருத்திய வயலாக விளங்குகிறது. வயல்களில் ஆங்காங்கு மேடுகள் இருக்கின்றன. அவற்றிலும் வயல்களிலும் உடைந்த மட்பாண்டச் சிதைவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. செங்கல் 38 செ.மீ. நீளம், 20 செமீ அகலம், 10 செ.மீ. கனம் உடையதாக இருக்கின்றது. பெரிய மாளிகை மேட்டைத் தோண்டிக் கற்றுரண்கள் எடுக்கப் பட்டுப் புதுச்சாவடிக் குளத்தின் படிக்கட்டுகள் கட்டப்பட்டனவாம். காறைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகள் நிரம்பக் கிடைக்கின்றன. இம்மேட்டின் கிழக்கில் வெங்கற்சுவர் நீளமாகப் போவதை இன்றும் காணலாம். வழி நெடுகச் செங்கற் கவர்த் தளம் காணப் படுகிறது. பழைய அரண்மனைக் கழிவு நீர், மழை நீர் செல்ல வாய்க்கால் இருந்தது. ஒருவகைக் கல்லால் ஆகிய மதகின் சிதைவுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன. கோவிலுக்குப் பின்னே இன்றுள்ள ஒடை புதியது. அதன் இரு புறமும் செங்கற்சுவர்களின் சிதைவுகள் காண்கின்றன.மாளிகைமேடு தெற்கு வடக்கில் இரண்டு கி.மீ. நீளமுடையது. கிழக்கு மேற்கில் ஒன்றரை கிமீ நீளமுடையது.

பண்டை நகரம் : இராசேந்திரன் அமைத்த புதிய நகரத்தின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை எல்லைத் தெய்வங்களாக நிறுத்தினான் போலும் மேற்கு வாசல் காளி கோவில் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது; வடக்கு வாசல்


  1. J.M.S. Pillai’s ‘Solar Koyir Panigal’, pp. 44-45.
  1. கோவில் வேலை பார்க்கும் சுப்பராயபிள்ளை (72 வயது) யுடன் நான் ஒரு மணி நேரம் இம் மேட்டைப் பார்வையிட்டேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/234&oldid=492542" இலிருந்து மீள்விக்கப்பட்டது