பக்கம்:சோழர் வரலாறு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

சோழர் வரலாறு



கோவிற்கு 365 காணிநிலம் இருக்கின்றது. ஒரு காணிக்கு ரூ. 5-10-0 ஆண்டு வருவாய். இங்ஙனம் இருந்தும் தக்க கண்காணிப்பு இன்மையால், வரலாற்றுப் புகழ்பெற்ற இக்கோவில் இழிநிலையில் இருக்கின்றது. இந்நிலை நீடிக்குமாயின், இதன் சிறப்பே அழிந்து படும் என்பதில் ஐயமில்லை. நல்லறிவும் பக்தியுமுள்ள பெருமக்களிடம் கோவிற் பணியை ஒப்படைத்துக் கோவிலை நன்னிலையில் வைக்கச் செய்தல் அறநிலையப் பாதுகாப்பாளர் கடமையாகும். -

உறை கிணறுகள் முதலியன :- கோவிலுக்கு ஒரு கல் தொலைவுவரை நாற்புறங்களிலும் உறை கிணறுகள் அகப்படுகின்றன. பழைய செங்கற்கள் நிரம்பக் கிடைக்கின்றன, கருங்கற்கள் எடுக்கப்படுகின்றன.

கோவில் கோபுரம் :- இன்று, இடிந்து கிடக்கும் கோபுரம் ஏறத்தாழ 25மீ. உயரமாக இருந்ததாம். அது முழுவதும் கருங்கல் வேலைப்பாடு கொண்டது; மேலே சாந்தாலான கலசங்கள் ஏழு இருந்தனவாம். அக்கோபுரம், அணைக்கட்டிற்கு கல் வேண்டி 75 ஆண்டுகட்கு முன் வெடி வைத்தபோது இடிந்து விழுந்துவிட்டதாம். அச்சிதைவுகள் அப்புறப்படுத்தப்பட்டில; கோவில் திருச்சுற்று முழுவதும் முட்செடிகள் நிறைந்துள்ளன; செருப்பின்றி நடத்தல் இயலாத கேவல நிலையில் உள்ளது.

சோழ கங்கம் : இஃது இராசேந்திரனால் வெட்டப்பட்ட ஏரி. இஃது இப்போது ‘பொன்னேரி எனப் பெயர் பெற்றுள்ளது. இஃது இப்பொழுது மேடாக இருக்கிறது. ஊருக்கு வடக்கே உள்ள இந்த ஏரி, தெற்கு வடக்காக 25 கி.மீ. நீளமுடையது; உயர்ந்த கரைகளை உடையது. இந்த ஏரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அறுபது கல் தொலைவு. அங்கிருந்து பெரிய கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. அதன் வழிவந்த நீரே இந்த ஏரியை ஒரளவு நிரப்பியது. மற்றொரு கால்வாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/236&oldid=491323" இலிருந்து மீள்விக்கப்பட்டது