பக்கம்:சோழர் வரலாறு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

சோழர் வரலாறு



துத்தன், குண்டமையன், இளவரசர் சிலர், சாளுக்கிய ஆகவமல்லன் முதலியோர் போர்க்களம் விட்டு ஓடினர். பகைவருடைய யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் பன்றிக்கொடி, விலைமதிப்பற்ற சத்திய விவை, சாங்கப்பை முதலிய அரச மாதேவியர், உயர்குலப் பெண்மணிகள்[1], பிற பொருள்கள் எல்லாம் இராசேந்திர சோழன் கைக் கொண்டான். உடனே இராசேந்திரன் அதுகாறும் எவரும் செய்யாத ஒன்றைச் செய்தான். அஃதாவது, பகைவர் அம்புகளால் உண்டான புண்கள் உடம்பில் இருந்த அப்பொழுதே போர்க்களத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்[2]. பின்னர் இராசேந்திரன் கோல்ஹாப்பூர் சென்று, அங்கே வெற்றித்துாண் ஒன்றை நாட்டிக் கங்கை கொண்ட சோழபுரம் மீண்டான்.[3]

இராசாதிராசன் யானைமேல் இருந்தபோது இறந்ததால், ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர் பெற்றான்; இங்ஙனமே தன் பின்னோர் கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்டான்.

குடும்பம் : இராசாதிராசன் பூர்வ பல்குனியிற் பிறந்தவன்[4]. இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவன் மனைவியருள் பிராட்டியார் எனப்பட்ட திரைலோக்கியமுடையார் ஒருவர். மற்றவர் பெயர்கள் தெரியவில்லை. இவன் தன் சிற்றப்பன், தம்பியர், மக்கள் இவர்களை அரசியல் அலுவலாளராக வைத்திருந்தான் என்று இவனது மெய்ப்புகழ் கூறுகிறது.


  1. போர்க்களத்திற்கு அரசமாதேவியரும் உயர்குலப் பெண்டிரும் போதல் மரபு என்பது இதனால் தெரிகிறதன்றோ?
  2. 87 of 1895
  3. S.I.I. Vol.3, No.55; Vol.2, p. 304; 87 of 1895.
  4. 258 of 1910.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/248&oldid=492669" இலிருந்து மீள்விக்கப்பட்டது