பக்கம்:சோழர் வரலாறு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

சோழர் வரலாறு



எனப்பட்டான்[1]. ‘உலகளந்தான்’ என்பதால், இராசாதி ராசன் காலத்திலும் நிலம் அளக்கப்பட்டிருக்கலாம் என்பது பெறப்படுகிறது. திருக்கழுக்குன்றம் இராசாதி ராசன் 26-ஆம் ஆட்சி ஆண்டில் ‘உலகளந்த சோழபுரம்’ எனப்பட்டது[2].

குணச்சிறப்பு : இராசாதிராசன் தனது வாழ்க்கையைப் போர்களிலேயே கழித்தான் என்னல் மிகையாகாது; தந்தையோடு கழித்த ஆண்டுகள் 26; தனியே அரசனாகக் கழித்த ஆண்டுகள் 10 ஆக 36 ஆண்டுகள் போர்களிலே கழிந்தன. இவன் பிறவியிலேயே போர் வீரனாகத் தோன்றியவன் போலும்! இப்பெரு வீரனது போர்த் திறனாற்றான் சோழப் பேரரசு நிலைத்து நின்றதென்னல் மிகையாகாது. இவனது பேராற்றலை இளமையில் உணர்ந்தே இராசேந்திரசோழன், மூத்தவனை விட்டு இவனைத் தன் இளவரசாகக் கொண்டான். இவன் தன் தந்தையின் காலத்திலேயே நிகரற்ற பெருவீரனாக விளங்கினான். இவனுடைய கல்வெட்டுகள் ‘திங்களேர் பெறவளர்’ ‘திங்களேர் தரு’ என்ற தொடக்கம் உடையவை.

இராசேந்திர சோழ தேவன்
(கி.பி. 1052-1064)

இளவரசன் : இராசேந்திர சோழ தேவன் கி.பி. 1044லேயே இளவரசன் ஆனான்; அன்று முதல் தன் தமையனான இராசாதிராசனுடன் அரசியலைக் கவனித்து வந்தான். இவன் ‘பரகேசரி’ என்னும் பட்டமுடையவன்.

முடி அரசன் : கி.பி.1054-ல் நடந்த கொப்பத்துப்போரில் இராசாதிராசன் இறந்தான். உடனே இராசேந்திரன் அங்கு


  1. 413 of 1902.
  2. 17 of 1894.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/250&oldid=492671" இலிருந்து மீள்விக்கப்பட்டது