பக்கம்:சோழர் வரலாறு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

263



காரணம் பொருத்தம் அன்று. வட கலிங்கம் சோழனுக்கு உட்பட்டதன்று. சோழன் வட கலிங்கத்தைப் பிடித்து ஆண்டதாகவும் சான்றில்லை[1]. ‘வடகலிங்கத்தரசன் நாடு வேட்கையால் தென் கலிங்கத்தைக் கைப்பற்ற முனைந்திருக்கலாம். இச்செய்தி காஞ்சி அரண்மனை[2] யிலிருந்து குலோத்துங்கற்கு எட்டியது. அவன் உடனே தொண்டைமானை வேங்கி இளவரசற்கு உதவியாக அனுப்பினான்’ எனக் கோடலே பொருத்தம் உடையது; அல்லது, முதற் கலிங்கப் போரும் இந்த இரண்டாம் கலிங்கப் போரும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் சூழ்ச்சியால் நடந்தன என்றும் கூறலாம். வேங்கியைச் சோழர் ஆட்சியிலிருந்து ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்ட அவன், பலமுறை சிற்றரசர் பலரை வேங்கியை ஆண்ட இளவரசர்க்கு மாறாகத் தூண்டினனாதல் வேண்டும். இத் துண்டல் முயற்சி ஏறத்தாழக் கி.பி.1118-ல் பயனளித்த தென்னலாம்.

வேங்கி அரசு : குலோத்துங்கன் தன் இறுதி நெருங்குவதை அறிந்து, கி.பி.1118-இல் விக்கிரம சோழனை வேங்கியிலிருந்து அழைத்துக்கொண்டான். உடனே வேங்கி நாட்டிற்குழப்பம் உண்டானது[3]. இஃது உண்மை என்பதைக் குலோத்துங்கன் 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளும் விக்கிரமசோழன் கல்வெட்டுகளுமே உணர்த்துகின்றன. திராக்ஷாராமத்தில் குலோத்துங்கனுடைய 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள் வரைதாம் கிடைத்துள்ளன. வேங்கியில் விக்கிரம சோழன் பட்டம் பெற்ற பிறகு உண்டான கல்வெட்டுகள் இல்லை. அவை குண்டுரையே வட எல்லையாகக் கொண்டுவிட்டன.


  1. K.A.N. Sastry’s Chola’s, Vol. II, pp. 37-38.
  2. இவ்வரண்மனை பற்றிய குறிப்பு உத்தமசோழன் கல்வெட்டுகளிற் காணலாம்.
    S.I.I. Vol.3. p. 269.
  3. Ep. Ind. Vol. 4, No.33.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/265&oldid=1233591" இலிருந்து மீள்விக்கப்பட்டது